தஞ்சை நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் மண்டல ஐ.ஜி ஆய்வு
ஒரு நாளைக்கு 8 மணி நேரத்திற்கு 100 பேர் வீதம் 24 மணிநேரத்திற்கு 300 பேர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தஞ்சாவூர்: தஞ்சை நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் திருச்சி மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன் ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார்.
2024ம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் கடந்த 19ம் தேதி தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிப்பை ஒட்டி இந்தியா முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதில் முதற்கட்டமாக தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் கடந்த 19ம் தேதி நடந்தது.
தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் 4 முனை போட்டி நிலவுகிறது. திமுக கூட்டணியில் திமுக வேட்பாளரும், அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளரும், பாஜக கூட்டணியில் பாஜக வேட்பாளரும், நாம் தமிழர் கட்சி வேட்பாளரும் களத்தில் உள்ளனர்.
தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் 6 சட்டசபை தொகுதிகள்
தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. திருவையாறு சட்டசபை தொகுதியில் 314 வாக்குச்சாவடிகளும், தஞ்சை சட்டசபை தொகுதியில் 292 வாக்குச்சாவடிகளும், ஒரத்தநாடு சட்டசபை தொகுதியில் 287 வாக்குச்சாவடிகளும் உள்ளன. இதேபோல் பட்டுக்கோட்டை சட்டசபை தொகுதியில் 272 வாக்குச்சாவடிகளும், பேராவூரணி சட்டசபை தொகுதியில் 260 வாக்குச்சாவடிகளும், மன்னார்குடி சட்டசபை தொகுதியில் 285 வாக்குச்சாவடிகளும் என தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் 1,710 வாக்குச்சாவடிகள் உள்ளன.
வாக்குப்பதிவு மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு
இந்த வாக்குச்சாவடிகளில் கடந்த 19ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடை பெற்றது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் சீல் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடி களில் இருந்து துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் உதவியுடன் வேன்களில் ஏற்றப்பட்டு தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
சுழற்சி முறையில் பாதுகாப்பு பணி
வாக்கு எண்ணும் மையத்தில் தரைதளத்தில் 2 சட்டசபை தொகுதிகளுக்கும், முதல் தளத்தில் 2 சட்டசபை தொகுதிகளுக்கும், 2ம் தளத்தில் 2 சட்டசபை தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இந்த 6 தொகுதிகளுக்கான பாதுகாப்பு அறையில் அந்தந்த தொகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு அந்த அறை கதவு பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 8 மணி நேரத்திற்கு 100 பேர் வீதம் 24 மணிநேரத்திற்கு 300 பேர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன் ஆய்வு
மேலும் 264 கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. இதற்கிடையில் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன் வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக இருக்கிறதா? கண்காணிப்பு கேமராக்கள் எல்லாம் செயல்பாட்டில் இருக்கிறதா? என ஆய்வு செய்தார்.
மேலும் அவர், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ள பகுதிகள், வாக்கு எண்ணும் அறைகள் ஆகியவற்றை பார்வையிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஜியாவுல் ஹக், தஞ்சை மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ்ராவத் ஆகியோரிடம் கேட்டறிந்தார். அப்போது அவரிடம் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவான விளக்கத்தை போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.