முதியவரை விரட்டி விரட்டி கடித்த காட்டுப்பன்றி... தஞ்சை அருகே அதிர்ச்சி
ஒரு புதரில் இருந்து ஆக்ரோஷமாக பாய்ந்து வந்த காட்டுப்பன்றி கலியராஜை முட்டி கீழே தள்ளியது. இதில் தடுமாறி விழுந்த அவரை முகத்தில் கடிக்க காட்டுப்பன்றி பாய்ந்துள்ளது.

தஞ்சாவூர்: 100 நாள் வேலைத்திட்டப்பணியில் ஈடுபட்டிருந்த முதியவரை காட்டுப்பன்றி விரட்டி விரட்டி கடித்த சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சை அருகே 100 நாள் வேலை திட்டப்பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளியை காட்டுப்பன்றி விரட்டி, விரட்டி தாக்கியது. இதில் காயம் அடைந்த அவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே நாகத்தி, வெள்ளாம்பெரம்பூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காட்டுப்பன்றிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இரவில் வயல்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. தற்போது குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் காட்டுப்பன்றிகளால் அதிக சேதம் ஏற்படுகிறது. இரவு வேளையில் வயல்களுக்கு புகுந்து பயிர்களை சேதப்படுத்தும். பகல் நேரங்களில் ஆற்றங்கரையோரம் உள்ள புதர்களில் பதுங்கிக்கொள்கிறது. இந்த காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் நாகத்தியை சேர்ந்தவர் கலியராஜ் (62). இவர் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை பார்த்து வந்தார். இதில் நாகத்தி ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டப்பணி நடந்து வந்தது. இந்த பணியில் கலியராஜ் உள்ளிட்ட 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் வேலை பார்த்த போது, ஒரு புதரில் இருந்து ஆக்ரோஷமாக பாய்ந்து வந்த காட்டுப்பன்றி கலியராஜை முட்டி கீழே தள்ளியது. இதில் தடுமாறி விழுந்த அவரை முகத்தில் கடிக்க காட்டுப்பன்றி பாய்ந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அலறிக் கொண்டே காட்டுப்பன்றியை கைகளால் தடுத்துள்ளார். உடனே காட்டுப்பன்றி கையை கடித்துள்ளது. கலியராஜ் அலறும் சத்தம் கேட்டு ஓடி வந்த மற்ற தொழிலாளர்கள் கற்கள் மற்றும் கட்டைகளை தூக்கி வீசி காட்டுப்பன்றியை விரட்டி அடித்தனர்.
காட்டுப்பன்றியின் இந்த ஆக்ரோஷமான தாக்குதில் கலியராஜ் படுகாயமடைந்தார். உடன் அவரை நாகத்தியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கலியராஜூக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வயல்களை சேதப்படுத்தி வந்த காட்டுப்பன்றி தற்போது ஆட்களையும் தாக்க தொடங்கி உள்ளது. எனவே காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விடுமுறை நாட்களில் குழந்தைகள் வயல் பகுதிக்கு செல்கின்றனர். அப்போது காட்டுப்பன்றி அவர்களை தாக்கும் அபாயம் உள்ளது. மேலும் சாகுபடி வயல்களை வெகுவாக சேதப்படுத்து விடுகின்றன. இதனால் விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. எனவே இனியும் காலம்தாழ்த்தாமல் காட்டுப்பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 100 நாள் வேலை திட்டப்பணியில் இருந்ததால் மற்ற தொழிலாளர்களும் இருந்தனர். இல்லாவிடில் கலியராஜை இன்னும் அதிகமாக காட்டுப்பன்றி தாக்கி கடித்து இருக்கும். எனவே இனியும் இதுபோன்று யாரும் பாதிக்கப்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.





















