13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வெல்டர் போக்சோவில் கைது
சிறுமி கடைவீதிக்கு வந்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட வினோத் அந்த சிறுமியை கட்டிப்பிடித்து பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

தஞ்சாவூர்: 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போக்சோ சட்டத்தில் தட்டி தூக்கினர் போலீசார். பட்டுக்கோட்டை பகுதியில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, போலீஸ் சரகத்திற்குட்பட்ட ஒரு கிராமத்தை சேர்ந்தவர் வினோத் (25). வெல்டிங் வேலை பார்த்து வருகிறார். இவர், அதே பகுதியை சேர்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும், 13 வயது சிறுமியிடம் உன்னை நான் காதலிக்கிறேன். என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறி தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் அந்த சிறுமி கடைவீதிக்கு வந்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட வினோத் அந்த சிறுமியை கட்டிப்பிடித்து பாலியல் தொல்லை அளித்துள்ளார். மேலும் என்னை நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் கூறி மிரட்டியதாக தெரிய வருகிறது. இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி தனது பெற்றோரிடம் இதுகுறித்து கூறி அழுதுள்ளார்.
தொடர்ந்து சிறுமியின் பெற்றோர், பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் வினோத் மீது புகார் செய்தனர். இதன் பேரில், வினோத்தை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் வினோத் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது உண்மை என தெரியவந்தது. இதையடுத்து பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து வினோத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.





















