கோடை காலத்தில் வீட்டிற்கு குளுமையை அளித்த சிவப்பு கப்பி கல்: நாம் மறந்து ஒதுக்கியது ஏனோ?
இயற்கை அள்ளிக் கொடுத்த அற்புதமான இந்த சிவப்பு கப்பி கல் நமக்கு அளிக்கும் நன்மையை நாம் மறந்து விட்டோம் அல்லது ஒதுக்கிவிட்டும் என்பது தான் நிதர்சனமான உண்மை.
தஞ்சாவூர்: இயற்கை நமக்கு அளித்த அருமையான சிவப்பு கப்பி கல் எனப்படும் செம்பாறாங்கல்லை மறந்து விட்டோம். கோடை காலத்தில் வெப்பத்தை வீட்டுக்குள் விடவே விடாதவை இந்த சிவப்பு கப்பி கல் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நம் முன்னோர்கள் நீர் மேலாண்மையில் மட்டுமல்ல சிற்பக் கலையில் மட்டுமல்ல கட்டிடக் கலையிலும் மிகச்சிறந்த அறிவைப் பற்றி விளங்கினர் என்பதற்கு பல்வேறு உதாரணங்கள் உள்ளன தஞ்சாவூர் பெரிய கோயில் கட்டுமானம் எவ்வாறு செய்யப்பட்டது என்பது இதுவரை அனைவரையும் பிரமிக்க வைக்கும் ஒன்றாகும். அதேபோல் தான் வெயில் காலத்தில் வீட்டிற்குள் வந்த வெப்பம் தெரியாமல் இருக்க நம் முன்னோர்கள் பயன்படுத்திய ஒரு வகை கற்கள் தான் தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் பகுதியில் கிடைக்கும் செம்பாறாங் கற்கள் ஆகும்.
பாறைகள் என்றாலே அது பலவிதம் தான். எந்த வகை பாறைகளை எதற்கு பயன்படுத்த வேண்டும் என்பதை நம் முன்னோர்கள் தெள்ளத் தெளிவாக தெரிந்து வைத்திருந்தனர் என்றால் அது மிகை இல்லை. அதேபோல் தான் தஞ்சாவூர் மாவட்டம் வல்லத்தில் கிடைக்கும் பாறைகள் பற்றி நம் முன்னோர்கள் நன்கு தெரிந்து வைத்திருந்தனர். காரணம் இந்த வகை பாறைகள் மிகவும் வித்தியாசமானவை.
காவிரி டெல்டாவில் இது ஒரு வித்தியாசமான பகுதி. டெல்டாவில் மிகவும் உயரமான பகுதி இதுதான். வல்லம் மற்றும் சுற்றுப்பகுதியில் காணப்படும் மண் 'லேட்ரைட்' எனப்படும் சிவப்புக் கப்பிக்கல் ஆகும். வல்லம் பகுதியில் இதை செம்பாறங் கல் என்கின்றனர். இந்த செம்பாறங்கற்களை கட்டடம் கட்டும் வகையில் கற்களாக வடிவமைத்து வல்லம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் வீடுகள், கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. சரிங்க இந்த கற்களால் கட்டப்படும் கட்டிடத்தில் சிறப்புகள் என்னவாக இருக்கும். இருக்கிறது. இந்தக் கற்களைப் பயன்படுத்தி கட்டப்பட்ட கட்டடத்தில் கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் வீட்டுக்குள்ளோ, கட்டிடத்தின் உள்ளேயோ, கோயிலுக்குள்ளே தெரியவே தெரியாது என்பதுதான் மிக முக்கியமான சிறப்பு.
வெளியில் வீசும் வெப்பக் காற்றை இந்தக் கல் உள்ளே விடாது. அதேபோல, உள்ளே உள்ள குளுமையான காற்றும் வெளியே செல்லாது. டெக்னாலஜி வளர்ந்த இந்த காலகட்டத்தில் ஏசி ரூம் எப்படி இருக்குமோ அது போல் தான் செம்பாறங்கல்லால் கட்டப்பட்ட வீடுகள், கட்டிடங்கள் இருக்கும். மழைகாலத்திலும், குளிர்காலத்திலும் வெளியே எவ்வளவு குளிர் இருந்தாலும், இந்தக் கட்டடத்துக்குள் கதகதப்பாகத்தான் இருக்கும். தட்ப வெப்பநிலைக்கு ஏற்ப மாறக் கூடிய இந்தக் கற்களால் கட்டப்படும் வீடுதான் உண்மையான பசுமை இல்லம் என்பது மறுக்க முடியாத உண்மை அல்லவா. இந்தக் கற்களைப் பயன்படுத்தி கட்டப்பட்ட சுவரில் ஆணி கூட அடிக்க முடியாது. அவ்வளவு கடினமாக இருக்குமாம்.
இந்த பாறைகள் உடைந்து, சிதைந்து அதில் உள்ள வேதிப்பொருள்கள் வெளியேறிய பிறகு மிச்சமுள்ள பொருள்கள்தான் இந்தச் சிவப்புக் கப்பிக்கல் என்கின்றனர். இந்த சிவப்புக் கப்பிக்கல் ஈரமாக இருக்கும்போது துண்டுத் துண்டாக வெட்டலாம். அந்தத் துண்டுகள் காய்ந்த பிறகு அவற்றை உடைக்க முடியாது. சுத்தியால் அடித்தால் கூட உடையாது.
இதை நன்கு கண்டறிந்த நம் முன்னோர்கள் அதைக் கட்டடம் கட்டப் பயன்படுத்தியுள்ளனர். இது, மிகச் சிறந்த இயற்கையான கட்டடக் கல் என்றுதான் கூற வேண்டும். மேற்கு தொடர்ச்சி மலையிலும, கிழக்குத் தொடர்ச்சி மலையிலும் நகை கற்கள் கிடைக்கின்றன உள்ளன. நீலகிரி, கொல்லிமலை உள்ளிட்ட மலைப் பகுதி மக்கள் இந்தக் கற்களைப் பயன்படுத்தித்தான் வீடுகளைக் கட்டுகின்றனர். மற்ற கற்களில் இரும்பு அதிகமாக இருக்கும். இதனால், வெப்பமும், குளிரும் அதிகமாகத் தெரியும். ஆனால், வெப்பமும், குளிரும் தெரியாத சிவப்புக் கப்பிக் கல்லை விரயம் செய்து கொண்டிருக்கிறோம். சிமெண்ட் கலாசாரம் வந்த பிறகு இந்தக் கற்களை யாரும் விரும்புவதில்லை என்பதுதான் உண்மை. இயற்கை அள்ளிக் கொடுத்த அற்புதமான இந்த சிவப்பு கப்பி கல் நமக்கு அளிக்கும் நன்மையை நாம் மறந்து விட்டோம் அல்லது ஒதுக்கிவிட்டும் என்பது தான் நிதர்சனமான உண்மை.