அக்யூஸ்ட்டுக்கு ஆதரவா? இன்ஸ்பெக்டருக்கு எதிர்ப்பு தெரிவித்து போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை
டூ வீலரில் கடைத்தெருவுக்கு வந்த, தீர்க்கரசுவை நான்கு பேர் கொண்ட மர்மக்கும்பல் பல இடங்களில் வெட்டி விட்டு தப்பி சென்று விட்டனர்.

தஞ்சாவூர்: விவசாயியை வெட்டிய கும்பலுக்கு ஆதரவு கொடுக்கும் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிராமமக்கள் போலீஸ் ஸ்டேஷன் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் ஆம்பலாபட்டு பகுதியை சேர்ந்தவர் தீர்க்கரசு (54). விவசாயி. இவர் தனது சுமார் ஒரு ஏக்கர் நிலத்தை, அடமானம் வைத்துக்கொண்டு, ஏழு லட்சம் ரூபாய் பணம் வேண்டும் என, பாப்பாநாட்டை சேர்ந்த திருகுமாரிடம் (50) கேட்டுள்ளார் இதற்கு திருகுமார், நிலத்தினை கிரயம் செய்துக்கொடுத்து விட்டு, பணத்தை பெற்றுக்கொள்ளவும். பணம் தந்த பிறகு, நிலத்தை மீண்டும் எழுதி தருவதாக தீர்க்கரசிடம் கூறி, நிலத்தை எழுதி வாங்கிக்கொண்டு பணத்தை கொடுத்தார்.
சில மாதங்களுக்கு பிறகு, தீர்க்கரசு வட்டியுடன் பணத்தை திருகுமாரிடம் கொடுத்து விட்டு, நிலத்தை மீண்டும் தன் பெயருக்கு பத்திரம் செய்து தர கேட்டார். இங்குதான் தீர்க்கரசுவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆனால், நிலத்தை தர முடியாது என திருகுமார் கூறிதால், இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு இந்த பிரச்சினை தொடர்பாக தீர்க்கரசு, திருகுமார் வீட்டில், பெட்ரோல் குண்டு வீசி உள்ளார். இது தொடர்பான வழக்கில் தீர்க்கரசு கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றார். இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜாமீன் பெற்று சிறையில் இருந்து தீர்க்கரசு ஊருக்கு திரும்பினார்.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் மாலை, டூ வீலரில் கடைத்தெருவுக்கு வந்த, தீர்க்கரசுவை நான்கு பேர் கொண்ட மர்மக்கும்பல் பல இடங்களில் வெட்டி விட்டு தப்பி சென்று விட்டனர். உடன் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் தீர்க்கரசுவை மீட்டு தஞ்சாவூர் மருத்துக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அன்று இரவே இந்த சம்பவத்திற்கு காரணமான திருக்குமாரை கைது செய்ய கோரி ஆம்பலாபட்டு கிராம மக்கள் இரண்டு மணிநேரம்ட சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் பாப்பாநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இருப்பினும், திருகுமாரால், தீர்க்கரசு உயிருக்கு ஆபத்து இருப்பதாக, பாப்பாநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபனிடம் கிராம மக்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் புகார் அளிக்கும் நபர் குறித்து திருகுமாருக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த தகவலின் பேரில் புகார் அளித்தவரை திருகுமார் மிரட்டியதாக கூறப்படுகிறது. இது பொதுமக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து தீர்க்கரசு வெட்டுப்பட்டதற்கும் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தான் காரணம். அவர் மீது நடவடிக்கை வேண்டும், தீர்க்கரசுவின் நிலத்தை அவரிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும், குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கோரி, பாப்பாநாடு போலீஸ் ஸ்டேஷ்னை முற்றுகையிட்டு ஆம்பலாபட்டு கிராமமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்த தஞ்சாவூர் ஏ.டி.எஸ்.பி., வீரபாண்டி, ஒரத்தநாடு தாசில்தார் யுவராஜ் மற்றும் அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரப்படும். குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என உறுதியளித்தால் போராட்டத்தை கிராமமக்கள் கைவிட்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் இதுவரை இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

