எங்களையும் கொஞ்சம் பாருங்க... திருக்கானூர்பட்டியில் சுகாதார நிலையம் வேணும்ங்க: தவிக்கும் விவசாயத் தொழிலாளர்கள்
. காவிரி ஆறு பாய்ந்தோடும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருக்கானூர்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்ட பகுதிகளாகவே உள்ளது என்று இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருக்கானூர்பட்டியில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தர வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்ட பகுதிகள்
தஞ்சை-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் தஞ்சை பழைய பஸ்ஸ்டாண்டில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவிலும், புதிய பஸ் நிலையத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவிலும், அமைந்து உள்ளது திருக்கானூர்பட்டி அமைந்துள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் தற்போது வளர்ந்து வரும் இந்த ஊரை சுற்றிலும் ராவுசாப்பட்டி, மாப்பிள்ளைநாயக்கன்பட்டி, அற்புதாபுரம், சர்க்கரை ஆலை, குருங்குளம், தோழகிரிப்பட்டி, சுந்தராம்பட்டி, மின்னாத்தூர், ஏழுபட்டி, நாகப்புடையான்பட்டி, வாகரக்கோட்டை, தங்கப்பஉடையான்பட்டி உள்பட ஏராளமான சிறிய மற்றும் பெரிய கிராமங்கள் அமைந்து உள்ளன. முழுக்க, முழுக்க இந்த கிராமப்பகுதிகள் அனைத்தும் விவசாயத்தையே பிரதான தொழிலாக கொண்ட பகுதிகள் ஆகும்.
விவசாயத் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி
இந்த கிராமங்களில் உள்ள பெரும்பாலானார் விவசாயிகள் மற்றும் விவசாய கூலி தொழிலாளர்கள் ஆவார்கள். காவிரி ஆறு பாய்ந்தோடும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருக்கானூர்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்ட பகுதிகளாகவே உள்ளது என்று இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த பகுதியில் காவிரி ஆற்றுப்பாசனம் கிடையாது. இதனால் விவசாயிகள் அனைவரும் ஆழ்குழாய் பாசனம் மற்றும் மழை நீரை நம்பியே விவசாயம் செய்து வருகிறார்கள். முன்பு வானம் பார்த்த பூமியாக இருந்தது. அதாவது மழை பெய்தால் மட்டுமே சாகுபடி என்ற நிலை இருந்தது.
ஆழ்குழாய் கிணறுகள் மூலம் சாகுபடி
முன்பெல்லாம் இந்த பகுதிகளில் ஆழ்துளை கிணறு தோண்டும்போது சில நூறு அடிகளிலேயே தண்ணீர் கிடைத்து விடும். தற்போது பூமி வறண்டு விட்டதன் காரணமாக கடந்த பல ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான அடி தோண்டினால் மட்டுமே ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் கிடைக்கிறது.
ஆனாலும் இந்த பகுதி கிராம மக்களுக்கு விவசாயமே பிரதான தொழில் இதைவிட்டால் இவர்களுக்கு வேறு தொழில் தெரியாது என்பதால் மண்ணையும், தங்களையும் காப்பாற்றிக் கொள்ள இந்த பகுதி மக்கள் விவசாய தொழிலை விட்டு விடாமல் சாகுபடி பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். போராடி வருகின்றனர் என்பதே சரியான வார்த்தையாகும்.
எங்கள் பகுதி பக்கமும் பார்வையை திருப்புங்கள்
மேலும் இந்த பகுதி கிராமங்களில் தொழிற்சாலைகள் எதுவும் இல்லை என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விசயம் ஆகும். விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் நிறைந்த இந்த பகுதியில் வசிக்கும் பெண்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டால் மருத்துவ வசதிக்கும், பிரசவத்திற்கும் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தஞ்சை அரசு ராசாமிராசுதார் மருத்துவமனைக்கும், 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், 4 கிலோ மீட்டர் தொலைவில் வல்லத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கோ தான் சென்று சிகிச்சை பெற முடியும் என்ற நிலை உள்ளது.
சிகிச்சைக்கு எவ்வளவு தூரங்க போறது
அதுவும் விவசாய பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களில் யாருக்கேனும் விஷ பூச்சி கடித்துவிட்டால் உடனடியாக சிகிச்சை பெறுவதற்கு இந்த பகுதி மக்களுக்கு வசதியில்லை. இதேபோல் இரவு நேரங்களில் யாருக்கேனும் நோய்வாய்ப்பட்டாலும் அவர்கள் உடனடியாக சிகிச்சை பெற முடியாத நிலை உள்ளது. எனவே திருக்கானூர்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் வசிக்கும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு திருக்கானூர்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தர வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.