படித்த படிப்புக்கு வேலையில்லை... கிடைத்த வேலையிலும் போதிய சம்பளம் இல்லை: நாற்று நடும் பணியில் பட்டதாரிகள்
படித்த படிப்புக்கு வேலை கிடைக்கலாட்டி என்ன என்று நாற்று நடும் பணிகளை பட்டதாரிகள் மேற்கொண்டு வருவதும் மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் கும்பகோணத்தில் ஆற்று நீர் மற்றும் பம்பு செட் தண்ணீரை பயன்படுத்தி சம்பா, தாளடி சாகுபடி பணிகள் வெகு தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் படித்த படிப்புக்கு வேலை கிடைக்கலாட்டி என்ன என்று நாற்று நடும் பணிகளை பட்டதாரிகள் மேற்கொண்டு வருவதும் மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
முப்போகமும் நெல் சாகுபடிதான்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். தற்போது ஆற்றில் தண்ணீர் வந்து கொண்டிருப்பதாலும், பருவ மழை பெய்து வருவதால் கிணறு, ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் போதுமான அளவு உள்ளது. இதனால் விவசாயிகள் சம்பா, தாளடி பணிகளில் வெகு மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பாய் நாற்றங்கால் தயாரிப்பு பணி
மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடபட்ட தண்ணீர் மற்றும் ஆழ்துளை கிணறுகள் மூலம் இந்த சாகுபடி செய்து வருகின்றனர். மேலும் பருவ மழையும் விவசாயிகளுக்கு கைகொடுத்து வருகிறது. சம்பா சாகுபடியை பொறுத்தவரையில் விவசாயிகள் நீண்ட 180 நாட்கள் நெல்லை தான் சாகுபடி செய்வார்கள். விவசாயிகள் டிராக்டர்கள் மூலம் வயலில் எரு அடிப்பதும், வயலை உழுது தயார் செய்வது போன்ற பணிகளில் ஈடுபட்டனர். பின்னர் பாய்நாற்றங்கால் தயாரித்து சம்பா நாற்று நடும் பணிகள் பெரும்பாலான இடங்களில் நடந்து வருகின்றன.
இயந்திர நடவுதான் இப்போதைக்கு சரியானது
குறிப்பாக கும்பகோணம் அருகே திருப்புறம்பியம், ஏரகரம், உத்திரை பகுதியில் இயந்திரம் மூலம் நடவு நடும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நாற்றுகள் பறிக்கும் பணி, நடவுப்பணிகளில் பெண்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். எந்திரம் மூலம் நடுவதால் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு அடுத்த வயல்களுக்கு சென்று விடுகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறுகையில், மேட்டூரில் வழக்கம் போல் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இருப்பினும் தேவையான இடங்களுக்கு தண்ணீர் வரவில்லை. இதனால் பம்பு செட் மூலம் சாகுபடியை தொடங்கிவிட்டோம். எந்திரத்திற்கான வாடகை உயர்ந்துவிட்டது.
வாடகை உயர்ந்து விட்டது என்ன செய்யறது?
கடந்த ஆண்டு ஏக்கருக்கு ரூ.2,500-க்கு இருந்த வாடகை இந்த ஆண்டு டீசல் விலை உயர்வால் ரூ.300-வரை உயர்ந்துவிட்டது. சொந்தமாக எந்திரம் வைத்திருப்பவர்கள் ஆட்கள் கூலி மட்டும் கொடுக்கின்றனர். ஆனால் வாடகைக்கு எடுப்பவர்கள் ஆட்கள் கூலி, வாடகை என கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு செலவு கூடிவிட்டது. மேலும் வேலைக்கு ஆட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் எந்திரத்தின் பயன்பாடு அதிகளவில் தேவைப்படுகிறது. சம்பா, தாளடிக்கு சொந்தமாக பாய் நாற்றங்கள் தயாரித்து நடுகிறோம் எங்களுக்கு நடுவு முடிந்த பின்னர் வரும் மீதி நாற்றங்காலை ஒரு ரேக் (வரிசை) ரூ.35-க்கு விற்பனை செய்து விடுவோம் என்றனர்.
கூடுதல் வருவாய்க்கு நாற்று நடுகிறோம்
நடவு பணியில் ஈடுபட ஆட்கள் தட்டுபாடு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்து வரும் நிலையில் கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சோ்ந்த என்ஜினீயரிங் மற்றும் கலைஅறிவியல் பிரிவு படித்த பட்டதாரி இளைஞர்கள் சிலர் வருவாய்க்காக நடவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் விக்னேஷ் என்பவர் கூறுகையில், என்ஜினீயரிங் படித்த எனக்கு தனியார் நிறுவனத்தில் ரூ.15 ஆயிரத்திற்கு வேலை கிடைத்தது. ஆனால் அந்த சம்பளம் போதிய அளவு இல்லை. நிறுவனத்தில் வேலை இல்லாத நாட்களில் வயலில் நடவு பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். 1 ஏக்கருக்கு எந்திரத்தின் வாடகை ரூ.2 ஆயிரத்து 200 ஆகிறது. அதே போக டீசல் செலவு, உணவு செலவு இருக்கிறது.
எந்திரத்திற்கு 4.5 லிட்டர் டிசல் வரை தேவைப்படும். அந்த டீசல் 3 ஏக்கர் வரை நடவு செய்யமுடியும். படித்த படிப்பிற்கு வேலை கிடைக்க வில்லை. கிடைத்த வேலையில் போதிய சம்பளம் கிடைக்காததால் என்னை போல் மேலும் சில இளைஞர்கள் நடவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.