அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே... நண்பனே: கண்கள் கலங்க ஆணையருக்கு பிரியாவிடை கொடுத்த தஞ்சை மேயர்
ஆணையர் எனக்கு மனைவி மாதிரி, நான் அவருக்குக் கணவர் மாதிரி. நல்ல குடும்பமாக இருந்து செயல்பட்டதால் மாநகராட்சியின் தரம் உயர்த்தப்பட்டு உள்ளது.
![அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே... நண்பனே: கண்கள் கலங்க ஆணையருக்கு பிரியாவிடை கொடுத்த தஞ்சை மேயர் Thanjavur Mayor Emotional Farewell to Corporation Commissioner Saravanakumar- TNN அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே... நண்பனே: கண்கள் கலங்க ஆணையருக்கு பிரியாவிடை கொடுத்த தஞ்சை மேயர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/02/b93b7f36c99ba48b2cb0011bb610e89b1696255639248113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தஞ்சாவூர்: அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே... நண்பனே என்று கண்கள் கலங்கி மனதில் இருந்த வார்த்தைகள் வெளியில் வராமல் கனத்த மனதுடன் பிரியாவிடை கொடுத்தார் தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன். யாருக்கு தெரியுங்களா?
தஞ்சை மாநகராட்சி மாதந்திர கூட்டம். மாமன்ற கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்தில் கரூர் மாநகராட்சிக்கு பணி மாறுதல் பெற்று செல்லும் தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணக்குமாருக்கு பிரிவுபசார விழாவும், பாராட்டு விழாவும் சேர்ந்து நடத்தப்பட்டது என்பதுதான் முக்கியமான ஒன்று. தஞ்சை மாநகராட்சி ஆணையராக சரவணக்குமார் பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். முக்கியமாக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் தீவிரம் காட்டினார்.
நீர் நிலைகளில் இருந்த ஆக்கிரமிப்புகள், சாலை ஆக்கிரமிப்புகள், மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களை மீட்பது என்று அதிரடி நடவடிக்கைகள் தொடர்ந்தன. இதற்கிடையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு தஞ்சை மாநகராட்சி மேயராக திமுகவை சேர்ந்த சண்.ராமநாதன் பதவியேற்றார். இருவரும் இணைந்து பல்வேறு சமூகப்பணி திட்டங்களை மேற்கொண்டனர். மாநகராட்சி கூட்டத்தின் போது `தஞ்சாவூர் மாநகராட்சி தமிழகத்திலேயே கடன் இல்லாத மாநகராட்சியாக உருவெடுத்துள்ளது’’ எனப் பெருமிதத்துடன் தெரிவித்த மேயர் சண்.ராமநாதன், `ஆணையர் எனக்கு மனைவி மாதிரி, நான் அவருக்குக் கணவர் மாதிரி. நல்ல குடும்பமாக இருந்து செயல்பட்டதால் மாநகராட்சியின் தரம் உயர்த்தப்பட்டு உள்ளது என்று நெகிழ்ச்சியுடன் பேசியிருந்தார்.
இந்நிலையில் மாநகராட்சி மேயர் சரவணக்குமார் கரூர் மாநகராட்சிக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதை ஒட்டி நடந்த பிரிவுபசார விழாவில்தான் மேயர் சண். ராமநாதன் கண்கள் கலங்க நெகிழ்ச்சி அடைந்த சம்பவம் நடந்தது. பிரிவுபசார விழாவை ஒட்டி மாநகராட்சி நுழைவு வாயிலில் அலங்கார வளைவுகள் வைக்கப்பட்டு இருந்தன. ஆணையர் புகைப்படத்துடன் சரித்திர நாயகர். சரவணக்குமார் வந்தார். இதயங்களை வென்றார் என அச்சிடப்பட்ட 32 நீள பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டு இருந்தது.
கூட்டத்தில் கட்சி பாகுபாடு இல்லாமல் அனைத்து கவுன்சிலர்களும் ஆணையரின் செயல்பாட்டை பாராட்டி பேசியதுதான் செம ஹைலைட். ஒவ்வொரு மாமன்ற உறுப்பினர்களும் வரிசையாக பாராட்டி பேசி கொண்டு இருக்கும்போது எம்எல்ஏ டி.கே.ஜி. நீலமேகம் ஆதரவு கவுன்சிலர்கள் பாராட்டு கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
கவுன்சிலர்கள் பாராட்டி பேசும்போது ஆணையர் சரவணக்குமார் கண்கலங்கியபடியே இருந்தார். அடிக்கடி கையில் வைத்திருந்த துண்டால் கண்களை துடைத்தபடியே இருந்தார். அந்தளவிற்கு தஞ்சையில் இரண்டற கலந்து விட்டு இருந்தார் ஆணையர். தொடர்ந்து மேயர் சண். இராமநாதன் பாராட்டி பேசும்போது கண்கலங்கிய படி பேச தொடங்கினார். பணிமாறுதல் ஆர்டர் வந்தவுடன் ஆடிபோய் விட்டேன். இனி எப்போது இவரை பார்ப்போம் என மனம் பதை பதைத்தது. விருது வாங்க செல்லும் போது ஒன்றாக தானே போவோம் என மனதை தேற்றி கொண்டேன்.
சனிக்கிழமை ஊருக்கு செல்லும் போது போய்ட்டு வருகிறேன் என்று சொல்லி விட்டு செல்வார். கணவன், மனைவி போல் ஒரே கருத்தோடு வாழ்ந்து வந்தோம் என நா தழுதழுக்க பேசினார்
மேயரை தொடர்ந்து ஏற்புரையாற்றிய ஆணையர் சரவணக்குமாருக்கு பேச்சே வரவில்லை. சிறிது நேரம் எதுவும் பேசாமல் கண்கள் கலங்கியபடி நின்றிருந்தார். பின்னர் மெதுவாக பேசியவர், நான் தஞ்சையில் கால் வைத்தபோது என் கண்ணில்பட்ட அனைத்து ஆக்ரமிப்புகளையும் அகற்றி விட்டேன் என பெருமையுடன் கூறினார். பின்னர் தான் கடந்து வந்த பாதையை பகிர்ந்து கொண்டார்.
கூட்ட நிறைவில் மாமன்ற உறுப்பினர்கள், பொது மக்கள் அனைவரும் பணி மாறுதல் பெற்று செல்லும் ஆணையருக்கு சால்வை அணிவித்து பாராட்டினர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)