நல்லா இருப்பீங்க... அசைவ விருந்து வைத்து அசத்திட்டீங்க: மனம் நெகிழ்ந்து பாராட்டிய தூய்மைப்பணியாளர்கள்
இவ்வளவு பெரிய ஹோட்டலுக்கு அழைச்சுக்கிட்டு வந்து பன்னீர் தெளித்து சந்தனம் கொடுத்து மிகவும் மரியாதை செலுத்தி உள்ளே அழைச்சுக்கிட்டு வந்தாங்க. வேனில் அழைத்து வந்து மீண்டும் இங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

தஞ்சாவூர்: 300 டன் தீபாவளி குப்பைகளை அகற்றி நகரை 4 மணி நேரத்தில் சுத்தமாக்கிய மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு ரூ.1000ம் அன்பளிப்பும், உயர்தர அசைவ ஹோட்டலில் சுவையான விருந்தும் வைத்து தஞ்சாவூர் ஜோதி அறக்கட்டளை நிறுவனம் கௌரவப்படுத்தி உள்ளது.
தீபாவளி பண்டிகை ஒட்டி, தஞ்சையில் பட்டாசு குப்பைகள், சாலையோர வியாபாரிகள் விட்டு சென்ற குப்பைகள் என சுமார் 300 டன் குப்பைகள் சேர்ந்தன. வழக்கத்தை விட 5 மடங்கு சேர்ந்த குப்பைகளை மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கனமழையையும் பொருட்படுத்தாமல் அதிகாலை முதல் தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர். இவர்களின் விரைவான பணியால் 4 மணி நேரத்தில் அனைத்து குப்பைகளையும் முழுமையாக அகற்றி மாநகரை தூய்மையாக்கினார்கள். இதனால் மழை நேரத்தில் குப்பைகள் நனைந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவது தவிர்க்கப்பட்டது. இவர்களின் இந்த கடினமாக பணியை மற்றும் சேவையை பாராட்டி கௌரவிக்க தஞ்சாவூர் ஜோதி அறக்கட்டளை நிறுவனம் முடிவு செய்தனர்.

இதையடுத்து ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார் கூறியதாவது: தீபாவளி பண்டிகையை ஒட்டி பட்டாசு குப்பைகள், வியாபாரிகள் விட்டுச் சென்ற குப்பைகள் என சுமார் 300 டன் குப்பைகளை கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தூய்மைப்பணியாளர்கள் அத்தனை குப்பைகளையும் அகற்றி நகரை தூய்மைப்படுத்தினர். இவர்களின் அசராத இந்த உழைப்பால் தஞ்சை மாநகரமே தூய்மை ஆனது என்றால் மிகையில்லை. இத்தகைய உழைப்பை கொடுத்த தூய்மைப்பணியாளர்களை கௌரவப்படுத்தும் விதமாக அவர்களுக்கு அசைவ அறுசுவை விருந்தை உயர்தர உணவகத்தில் ஏற்பாடு செய்தோம். அவர்களை தனி வேனில் அழைத்து வந்து பன்னீர் தெளித்து சந்தனம் கொடுத்து உரிய மரியாதையுடன் உணவகத்தில் அறுசுவை விருந்து படைத்தோம். முழுமையாக அசைவ உணவை அவர்கள் ருசித்து சாப்பிட்டதை கண்டு மனம் நிறைந்தது. நம் நகரை மிகவும் தூய்மையாக்க உழைக்கும் அவர்களுக்கு உரிய கௌரவத்தை அளிக்க வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. நூற்றுக்கும் அதிகமான தூய்மைப்பணியாளர்களுக்கு இந்த அசைவ விருந்து அளிக்கப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த அசைவ விருந்தை சாப்பிட்ட பின்னர் தூய்மைப்பணியாளர்கள் தரப்பில் தெரிவிக்கையில், எங்களை மிகவும் கவுரவப்படுத்தி விட்டனர். நல்லா இருக்கணும் அவங்க. இந்த விருந்தில் மீன், கறிகோலா, முட்டையுடன் சிக்கன் பிரியாணி என ஏகப்பட்ட விதவிதமான அசைவ உணவுகளை அவங்களே பரிமாறி வயிறார சாப்பிட வைத்து சந்தோஷப்படுத்தினர். இதுபோன்ற பெரிய ஹோட்டல்களுக்கு நாங்க போனது கிடையாது. ஆனா எங்களை இவ்வளவு பெரிய ஹோட்டலுக்கு அழைச்சுக்கிட்டு வந்து பன்னீர் தெளித்து சந்தனம் கொடுத்து மிகவும் மரியாதை செலுத்தி உள்ளே அழைச்சுக்கிட்டு வந்தாங்க. வேனில் அழைத்து வந்து மீண்டும் எங்களை இங்கிருந்து அழைத்துச் சென்றனர். அதுமட்டுமா சாப்பிட்டு முடித்து வீட்டிற்கு புறப்பட்ட எங்களிடம் தலா ஆயிரம் ரூபாய் அன்பளிப்பாக வழங்கி அனுப்பி வைத்தனர் அறக்கட்டளை நிர்வாகத்தினர். எங்கள் மனமும் நிறைந்தது, வயிறும் குளிர்ந்தது. எங்களை இதுபோன்ற உயர்தர அசைவ உணவகத்திற்கு அழைத்து வந்து மிகவும் கௌரவப்படுத்திய ஜோதி அறக்கட்டளையினருக்கு மிக்க நன்றி தெரிவித்து கொள்கிறோம். இத்தனைப் பேருக்கும் ஒரே விதமான கவனிப்பு. இன்னைக்குதான் எங்களுக்கு உண்மையாக தீபாவளி என்றனர். இதை அவர்கள் கூறும் போது முகம் மலர்ந்து காணப்பட்டது.





















