காத்திருந்து... காத்திருந்து கருவாடாக மாறிடுச்சு... நேற்று பாலைவனம் போல் வெறிச்சோடிய தஞ்சை மீன் மார்க்கெட்
புரட்டாசி மாதம் முழுவதும் அசைவ உணவுகளை தவிர்த்து விட்டு சைவ உணவுகளை மட்டுமே அவர்கள் சாப்பிடுவார்கள்.

தஞ்சாவூர்: கூட்டமே இல்லைங்க... வியாபாரிகளை ஏமாற்றம் அடைய செய்த மக்கள். என்ன விஷயம் தெரியுங்களா? புரட்டாசி மாதம் மற்றும் மஹாளய அமாவாசை நேற்று ஞாயிற்றுக்கிழமை வந்ததால் தஞ்சையில் மீன்மார்க்கெட் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடியது. 1 டன் கூட மீன்கள் விற்பனையாகாததால் வியாபாரிகள் மிகுந்த ஏமாற்றத்தை சந்தித்தனர்.
புரட்டாசி மாதத்தில் இந்துக்களில் ஏராளமானோர் விரதம் இருந்து பெருமாள் கோயில்களுக்கு செல்வது வழக்கம். இதனால் புரட்டாசி மாதம் முழுவதும் அசைவ உணவுகளை தவிர்த்து விட்டு சைவ உணவுகளை மட்டுமே அவர்கள் சாப்பிடுவார்கள். இதனால் இந்த ஒரு மாதத்தில் அசைவ உணவுகளான மீன், ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி ஆகியவற்றின் விற்பனை குறையும்.
தஞ்சை கொண்டிராஜபாளையம் அருகே தற்காலிக மீன்மார்க்கெட்டில் மற்ற நாட்களை விட ஞாயிற்றுக்கிழமைகளில் மீன்வாங்குவதற்கு வரக்கூடியவர்களின் எண்ணிக்கை மிக மிக அதிகமாக இருக்கும். வழக்கத்தை விட ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் 10 டன் வரை மீன்கள் விற்பனை செய்யப்படும். பண்டிகை மற்றும் விசேஷ காலங்களில் 15 டன் வரை மீன்கள் விற்பனை நடைபெறும். இதனால் அந்த பகுதியில் ஞாயிற்றுக்கிழமையில் போக்குவரத்து பாதிப்பும் அடிக்கடி ஏற்படும்.
ஆனால் நேற்று புரட்டாசி மாதம் தொடங்கி முதல் ஞாயிற்றுக்கிழமையன்று மஹாளய அமாவாசையும் வந்ததால் மீன்மார்க்கெட் பாலைவனம் போல் வெறிச்சோடி காணப்பட்டது. மீன்வியாபாரிகள் கடைகளை திறந்து மீன்களை அடுக்கி வைத்திருந்தும் வாங்குவதற்கு யாரும் வரவில்லை. ஒன்றிரண்டு பேர் மட்டுமே வந்து மீன்களை வாங்கிச்சென்ற வண்ணம் இருந்தனர்
.
சாதாரண நாட்களில் மீன்மார்க்கெட்டிற்கு வரும் கூட்டம் கூட இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் மீன்கள் விற்பனை மிகவும் மோசமாக இருந்தது. மீன்கள் விலையும் வழக்கம் போல் தான் காணப்பட்டது. நேற்று 1 டன் மீன்கள் கூட விற்பனை செய்யப்படவில்லை. மீன்கள் விலையில் எந்த உயர்வும் இல்லாத நிலையிலும் மக்கள் மீன்கள் வாங்க வராததால் வியாபாரிகளும் கடும் ஏமாற்றம் அடைந்தனர்.
தஞ்சை மீன்மார்க்கெட்டில் நேற்று விற்பனை செய்த மீன்கள் (கிலோ கணக்கில் ) விலை விவரம் வருமாறு:-
சங்கரா பெரியது ரூ.250, சிறியது ரூ.150, அயிலை ரூ.150, விரால் பெரியது ரூ.400, சிறியது ரூ.250, உயிர் கெண்டை ரூ.150, ஐஸ் கெண்டை ரூ.150, உயிர் ஜிலேபி ரூ.130, ஐஸ் ஜிலேபி ரூ.80, சுறா ரூ.500, திருக்கை ரூ.300, வஞ்சிரம் ரூ.600, கொடுவா ரூ.600, கிழங்கா ரூ.100, வெள்ளை கிழங்கா ரூ.200, இறால் பெரியது ரூ.300, சிறியது ரூ.250, நண்டு ரூ.200, ராமேசுவரம் நண்டு ரூ.450.
இதுகுறித்து மீன் வியாபாரிகள் தரப்பில் கூறுகையில், புரட்டாசி மாதம் பிறந்ததால் மீன்கள் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. இனி இந்த ஒரு மாதத்திற்கு மீன்கள் விற்பனை மந்தமாக தான் இருக்கும். ஆனால் நேற்று புரட்டாசி மாதத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று அமாவாசையும் வந்தால் மீன்கள் விற்பனை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மீன்மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது. வழக்கமாக விற்பனை செய்யும் விலைக்கு தான் விற்பனை செய்யப்பட்டது. அமாவாசை ஞாயிற்றுக்கிழமை வராமல் இருந்திருந்தால் கூட ஓரளவு மீன்கள் விற்பனை நடைபெற்று இருக்கும். இதனால் பெரும் ஏமாற்றமே மிஞ்சியது என்றனர்.
அதேபோல் ஆட்டிறைச்சி, கோழிஇறைச்சி விற்பனையும் வெகுவாக பாதிக்கப்பட்டது.




















