ஒரு டன் ரேஷன் அரிசி பதுக்கல் - தஞ்சை அருகே ஒருவர் கைது
போலீசார் மேற்கொண்ட விசாரணையில் திருவையாறு, கண்டியூர், நடுக்கடை உள்ளிட்ட பகுதிகளில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி கால்நடை தீவனத்திற்காக கொண்டு சென்றது தெரிய வந்தது.
தஞ்சாவூர்: தஞ்சை அருகே 1 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தவரை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.
தஞ்சை அருகே திருவையாறு, நடுக்கடை, கண்டியூர் உள்ளிட்ட பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தஞ்சை குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து டிஎஸ்பி., நித்யா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் முருகானந்தம், சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கண்டியூர்- திருவையாறு பகுதியில் போலீசார் வாகன சோதனை நடத்திய போது அந்த வழியாக மூட்டைகளுடன் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர் அந்த மூட்டைகளில் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிய வந்தது.
பின்னர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர் திருவையாறு, கண்டியூர், நடுக்கடை உள்ளிட்ட பகுதிகளில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி கால்நடை தீவனத்திற்காக கொண்டு சென்றது தெரிய வந்தது.
மேலும் அவர் கொடுத்த தகவலின் பேரில் நடுக்கடை வடக்குத்தெருவில் ஒரு இடத்தில் பதுக்கி வைத்திருந்த அரிசியையும் பறிமுதல் செய்தனர். 50 கிலோ எடை கொண்ட 20 மூட்டைகளும், 40 கிலோ எடை கொண்ட 1 மூட்டையும் என மொத்தம் 1,040 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக திருவையாறு அடுத்த நடுக்காவேரி பகுதியை சேர்ந்த மணிகண்டன் (40) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.