தஞ்சை பாரத் கல்வி குழுமத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா உற்சாக கொண்டாட்டம்
இத்தகைய பொங்கல் பண்டிகையை பாரத் கல்லூரி ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டு துறை, பாரத் மகளிர் மன்றம் மற்றும் ஐக்யூஏசி ஆகியவை இணைந்து பாரத் பொங்ல் விழாவாக நடத்தின.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பாரத் கல்வி குழுமத்தில் நேற்று பாரத் பொங்கலோ பொங்கல் 2024 நிகழ்ச்சி 14 வது ஆண்டாக நடந்தது. இதில் பாரம்பரிய முறைபடி மாணவிகள் சேலை அணிந்தும், மாணவர்கள் வேட்டி அணிந்து பங்கேற்று பொங்கல் வைத்தனர்.
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகில் செயல்பட்டு வரும் பாரத் கல்வி குழுமத்தில் ஆண்டுதோறும் தமிழர் திருநாள் பொங்கல் விழா சிறப்பாக நடந்து வருகிறது அந்த வகையில் இந்த ஆண்டு 14ஆம் ஆண்டாக பாரத் பொங்கலோ பொங்கல் 2024 நிகழ்ச்சி நடந்தது. தமிழ் மாதத்திலே மிக சிறப்பு வாய்ந்த மாதமாக விளங்குகிறது தை மாதம். தமிழர் திருநாளான தை பொங்கலை அறுவடை திருநாளாக கூறுகிறார்கள். பொங்கல் பண்டிகையானது 4 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
போகி பொங்கல், தை பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் ஆகும். இந்த நான்கு தினங்களுக்கும் தனி தனி சிறப்பு பெயர் உள்ளது. தமிழர்கள் எத்தனை வகையான விழாக்கள் கொண்டாடினாலும் முதன்மை பெற்றுள்ளது இந்த பொங்கல் பண்டிகை. பொங்கல் அன்று அனைவரும் பொங்கல் வைத்து சூரிய வழிபாடு செய்தால் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் கிடைக்கும் என்பது ஐதீகம். இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரிய பகவானுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் நன்றி அறிதலையே பொங்கல் விழாவாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை விவசாயிகளின் செல்ல பண்டிகை என்றால் மிகையில்லை. அவர்கள் அறுவடை செய்த நெல்லை அரைத்து, அரிசி எடுத்து, பால்,நெய் சேர்த்து, பானையில் இட்டு அடுப்பில் கொதிக்க வைத்து, பொங்கல் சோறாக்கி சூரியனுக்கும், மாட்டுக்கும் படைத்து தாங்களும் உண்டு, இன்பம் அடையும் விழாவே பொங்கல் திருநாளாகும்.
இத்தகைய பொங்கல் பண்டிகையை பாரத் கல்லூரி ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டு துறை, பாரத் மகளிர் மன்றம் மற்றும் ஐக்யூஏசி ஆகியவை இணைந்து பாரத் பொங்ல் விழாவாக நடத்தின. கிராமிய மணம் மாறாத தமிழர் திருநாளை கொண்டாடும் வகையில் மாணவ மாணவிகள் 35 குடில்கள் அமைத்து இருந்தனர். முன்னதாக சிறப்பு விருந்தினர்கள், மாணவ, மாணவிகள் முளைப்பாரி, பூரண கும்பத்துடன்பொங்கல் பானைகளை மேள,தாளத்துடன் எடுத்து வந்தனர். அவர்களை கிராமிய நடனத்துடன் மாணவ மாணவிகள் வரவேற்றனர்.
நிகழ்ச்சிக்கு கல்லூரி இயக்குனர் முனைவர் வீராசாமி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக பாரத் கல்வி குழும செயலாளர் புனிதா கணேசன், நாடிமுத்து நினைவு அறக்கட்டளை அறங்காவலர் விக்ரம் சூரிய பிரசாத், பக்கிரி சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து சிறப்பு விருந்தினர் கல்லூரி செயலாளர் புனிதா கணேசன் முதல் குடிலில் பொங்கல் அடுப்பை பற்றவைத்தார். இதையடுத்து மற்ற குடில்களிலும் மாணவ, மாணவிகள் பாரம்பரிய முறைப்படி கரும்புகள் வைத்து மஞ்சள் கொற்று சுற்றப்பட்ட பானைகளில் பொங்கல் வைத்துதமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை விமர்சையாக கொண்டாடினர். முக்கியமாக இந்த விழாவில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளும் பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் வகையில் வேட்டி, சேலை அணிந்து பொங்கல் வைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதையடுத்து மாணவ, மாணவிகளின் கும்மியாட்டம், சிலம்பாட்டம், நாட்டுப்புற நடனம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நிறைவாக ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டு துறை தலைவர் சுபா நன்றி கூறினார்.
தங்கள் தலைமுறை மட்டுமின்றி இனி வரும் தலைமுறையினரும் பொங்கல் பண்டிகையின் பெருமையை அறிந்து கொள்ளும் வகையில் பாரத் கல்விக்குழும செயலாளர் புனிதாகணேசன் இத்தகைய சமத்துவ பொங்கல் விழாவை ஆண்டுதோறும் நடத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.