தஞ்சையில் சோகம்.. கார் விபத்தில் தாய், மகன் உயிரிழப்பு.. உயிருக்கு போராடும் தந்தை, மகள்
தஞ்சாவூர் விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வந்து கொண்டிருந்தபோது, அசூர் பைபாஸ் அருகே கார் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் நிலைதடுமாறி சாலையோரம் தடுப்புச் சுவரில் வேகமாக மோதியது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் - விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் அசூர் பைபாஸ் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்புச் சுவரில் மோதிய நொறுங்கியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே தாய், மகன் இறந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் தந்தை, மகள் திருச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (45). இவர் பட்டுக்கோட்டையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் விழுப்புரத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் வழிபாடு நடத்துவதற்காக சதீஷ்குமார், அவரது மனைவி சத்யா (40), மகன் ஸ்ரீராம் (17), மகள் அன்பி ஸ்ரீ (15) ஆகியோர் காரில் சென்றனர். பின்னர் கோயிலில் வழிபாடு முடிந்த பின்னர் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
இன்று அதிகாலை 3 மணியளவில் தஞ்சாவூர் விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வந்து கொண்டிருந்தபோது, அசூர் பைபாஸ் அருகே கார் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் நிலைதடுமாறி சாலையோரம் தடுப்புச் சுவரில் வேகமாக மோதியது. இதில், காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த விபத்தில், சதீஷ்குமார் மனைவி சத்யா சம்பவ இடத்திலேயே பலியானார். மகன் ஸ்ரீராம் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தார். பலத்த காயமடைந்த சதீஷ்குமார் அவரது மகள் அன்பி ஸ்ரீ இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து சுவாமிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.





















