பீர் பாட்டில்களை பறக்க விட்டு அட்ரா சிட்டி... இப்போ கம்பி எண்ணும் ரவுடி
காலி பீர் பாட்டிலைகளை எடுத்து மதுபான கடையை நோக்கி சர்... சர்.. .ரென்று ராக்கெட் போல் வீசினார். கடையில் இரும்பு தடுப்பு இருந்ததால் பாட்டில் அதில் மோதி சில்லுசில்லாக சிதறியது.

தஞ்சாவூர்: இந்தா வாங்கிக்கோ... கூடுதலாக பணம் கேட்ட டாஸ்மாக் கடையை நோக்கி சரசரவென்று சரக்கு பாட்டில்களை வீசி அட்ரா சிட்டி காட்டிய ரவுடி இப்போது கம்பி எண்ணுகிறார். இது எங்க நடந்துச்சு என்று தெரியுங்களா?
சரக்கு பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வாங்கிய டாஸ்மாக் விற்பனையாளர்களிடம் பணத்தை திருப்பிக்கேட்டு ரகளை செய்த ரவுடி கைது செய்யப்பட்ட சம்பவம்தான் அது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில், சரக்கு பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வாங்கிய, டாஸ்மாக் விற்பனையாளர்களிடம், பணத்தை திருப்பிக்கேட்டு ரகளை செய்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே கொண்டிக்குளம் பகுதியில், கடை எண். 8165 டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு, விற்பனையாளர் முருகேசன் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பணியில் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் டாஸ்மாக் மதுபான கடையில், கொண்டிக்குளம் பகுதியை சேர்ந்த மெய்கண்டன் மகன் வீரமணி (46) என்பவர், மது வாங்கியுள்ளார். அப்போது மதுவுக்கான விலையுடன் கூடுதலாக பத்து ரூபாய் டாஸ்மாக்கில் வசூல் செய்யப்பட்டுள்ளது.
அவ்வளவுதான் யாருக்கிட்ட கூடுதலாக பணம் கேட்டாய். நான் யாரு தெரியுமா என்றபடி ஆத்திரத்தின் உச்சத்திற்கே வீரமணி போய் உள்ளார். கோபத்தை முகத்தில் காட்டி கூடுதலாக வாங்கிய பத்து ரூபாய் பணத்தை திரும்பி தர கோரி விற்பனையாளர் முருகேசன் மற்றும் ராதாகிருஷ்ணனிடம் கேட்டு மிரட்டி தகராறு செய்துள்ளார். ஆனால் உன்னை போல் எத்தனை பேரை பார்த்திருக்கிறோம் என்பது போல் விற்பனையாளர்கள் கடையில் விற்பனையில் மும்முரம் காட்டியுள்ளனர்.
இதனால் மேலும் ஆத்திரமடைந்த வீரமணி கிடுகிடுவென்று சென்று வெளியில் கிடந்த காலி பீர் பாட்டிலைகளை எடுத்து மதுபான கடையை நோக்கி சர்... சர்.. .ரென்று ராக்கெட் போல் வீசினார். கடையில் இரும்பு தடுப்பு இருந்ததால் பாட்டில் அதில் மோதி சில்லுசில்லாக சிதறியது.
அடுத்தடுத்து 2 பாட்டில்களை பறக்கவிட்டு டாஸ்மாக் விற்பனையாளர்களை அதிர்ச்சி அடைந்தனர். இதை வீடியோவாகவும் எடுத்தனர். பின்னர் இதுகுறித்து டாஸ்மாக் மேற்பார்வையாளர் வினோதனுக்கு, ஊழியர்கள் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வினோதன் விசாரணை நடத்தி விட்டு, பட்டுக்கோட்டை தாலுகாவில் வீரமணி மீது புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வீரமணியை தாலுகா போலீசார் தேடி பிடித்து கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட வீரமணி சரித்திர பதிவேடு குற்றவாளி. இவர் மீது ஆறு வழக்குகள் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. சரக்கு பாட்டிலுக்கு கூடுதல் பணம் கேட்டதால் பாட்டிலை பறக்கவிட்டு அட்ரா சிட்டி காட்டிய ரவுடியை போலீசார் தட்டி தூக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.





















