தஞ்சை தஞ்சபுரீஸ்வர் கோயிலில் கும்பாபிஷேகம் - ஏராளமான பக்தர்கள் தரிசனம்
தஞ்சாகசுரன், என்னை வீழ்த்தியுள்ள நீ, கோடியம்மனாக இங்கேயே இருக்க வேண்டும், இந்த ஊரை எனது பெயரான தஞ்சபுரிஸ்வரர் என்று அழைக்கவேண்டும் என்றார்.
புராணப்படி, தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த யுத்தத்தில் தேவர்கள் தோல்வியை தழுவினார்கள். இதனால் கலக்கமுற்ற இந்திரன் முதலான தேவர்கள் இத்தல வன்னி மரத்தடியில் அவதரித்த சிவபெருமானை வணங்கி யுத்தத்தில் வெற்றி பெற்றதால் விஜயபுரி என்றும், தேவர்கள் வீரத்துடன் போரிட்டது மகாவீரபுரி என்றும் அழைக்கப்பட்டது.
விஜயாபுரி என்றழைக்கப்பட்ட இத்தலத்தில் சனகர், நாரதர் போன்ற மகரிஷிகள் நித்திய வாசம் செய்து வருகின்றனர். இத்தலத்தில் செய்யப்படும் தானம் மேருமலைக்கு ஒப்பானது. இத்தலத்தில் நித்தியவாசம் செய்து வந்த பராசர முனிவரிடம் இந்த தலத்தின் பெருமையை அறிந்துகொண்ட குபேரன் தனக்கு ஏற்பட்ட நிகழ்வினை கூறினார்.
நித்திய சிவ பூஜையை மேற்கொண்ட குபேரனுக்கு பார்வதி தேவியுடன் ஸ்கந்த நந்தி புடைசூழ கோடி சூர்ய பிரகாசத்துடன் கோடி சந்திர குளிர்ச்சியுடன் நீலகண்டராய் சிவன் காட்சி அளித்தார்.
இந்த அற்புதக் காட்சியைக் கண்ட குபேரன், சிவபெருமான் திருவடியில் விழுந்து வணங்கினார். குபேரனின் துதியால் மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான், குபேரனுக்கு வரமளிக்கும் வகையில், உன்னுடைய பெயரால் இத்தலம் குபேரத்தலம் என்பதோடு தஷிண அளகை என்றும் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு குபேரனின் அருளும் கிடைக்கட்டும் என்றார்.
தேவதானவாதிகளால் அமிர்தம் கடைந்தெடுக்கப்பட்டது. பிறகு அந்த அமிர்தத்தை தேவர்கள் முனிவர்கள் முறைப்படி பிரித்தளித்தனர். பராசரமுனிவர் பங்கான அமுதத்தை எடுத்துக்கொண்டு பூலோகம் வந்தடைந்தார். புண்ணியதலம், புண்ணிய தீர்த்தம், புண்ணிய வனம் ஆகிய பெருமைகளை உடைய காவிரி தென்கரையில் உள்ள தஞ்சபுரிஸ்வரர் கோயிலில் வைத்து அந்த அமுதத்தை பாதுகாத்து வந்தார்.
இந்த அழகாபுரியில் போரிட்டு, அமுதத்தை அபகரிக்க லவணாசுரனின் மகன்களான தண்டகன், வீரன், வஞ்சகன், தஞ்சகன் ஆகிய நான்கு பேரும் எண்ணினர். இதனை அறிந்த பராசரமுனிவர், சிவபெருமானை வேண்டி, அமிர்தத்தை காப்பாற்றி தருமாறு வேண்டினார். இதனையறிந்த சிவபெருமான், ஆனந்தவல்லி அம்மனை தோற்றுவித்தார். அதன்படி, அம்மனும்,தன்னுடைய சக்தியான ஏகவீரா, ஜயந்தி, மர்தீனீ, சண்டாகினி நான்காக பிரித்து, நான்கு புறத்திலும் அசர படைகளை அழிக்கு அனுப்பினார்.
போரில் அம்மனின் சக்தியான ஏகவீரா, தண்டாகசுரனையும், ஜயந்தி, வீராசுரனையும், மர்தீனி, வஞ்சகனையும் அழித்தனர். இதனையறிந்த தஞ்சகன் சண்டாகினியுடன் போரிடுகிறான். சண்டாகினியும் எருமையை வாகனமாக கொண்டு அதன் கொம்புகளால் தஞ்சாகசுரனை தாக்கினார். தனது இறுதி நிலையை அறிந்த தஞ்சாகசுரனிடம், உனது இறுதி விருப்பம் என்ன என்று அம்மன் கேட்டார்.
அதற்கு தஞ்சாகசுரன், என்னை வீழ்த்தியுள்ள நீ, கோடியம்மனாக இங்கேயே இருக்க வேண்டும். இந்த ஊர் எனது பெயரான தஞ்சபுரி என்று அழைக்கவேண்டும் என்றார். (காலப்போக்கில் தஞ்சாவூர் என மருவியதாக கூறப்படுகிறது) அதன்படியே, ஆனந்தவல்லி அம்மன் சிவபெருமானிடம் முறையிட்டு, தஞ்சகனின் ஆசையை நிறைவேற்றினாள என நம்பப்படுகிறது.
இக்கோயில் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் ஒன்றாகும். இங்கு ஆனந்தவல்லி அம்மன் சமேத தஞ்சபுரீஸ்வர் சுவாமி பக்தர்களுக்கு அருள் வழங்கி வருகின்றர்.
இத்தகைய சிறப்பு பெற்ற கோயிலில் பல ஆண்டுகளுக்கு பிறகு திருப்பணி நடந்து, கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் யாக சாலை தொடங்கியது. ஒன்றாம் தேதி நவக்ரஹ ஹோமம், சாந்தி ஹோமம், மகா லஷ்மி ஹோமம், ரஷராக்ன ஹோமம், பூர்ணாஹூதி நடைபெற்றது.
மூன்றாம் தேதி காலை அக்னி சங்கக்ராஹணம், கோயிலுக்கு புனித நீர் எடுத்து வரப்பட்டது. நான்காம் தேதி மூன்றாம் கால பூஜையும், ஐந்தாம் தேதி நான்காம் கால பூஜையும் நடைபெற்றது.
இன்று காலை 8.45 மணிக்கு கடங்கள் புறப்பட்டு, காலை 9.30 மணிக்கு அனைத்து விமானங்கள், ராஜகோபுரங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்திற்கான பணிகளை கோயில் அதிகாரிகள், பணியாளர்கள் செய்திருந்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்