வாங்க... வாங்க... அட்டகாசமான தபால்தலை கண்காட்சியை பார்க்க தஞ்சைக்கு வாங்க!!!
தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் இந்திய அஞ்சல் துறை சார்பில் தபால்தலை கண்காட்சி தொடங்கியது. இதை ஏராளமான மாணவ, மாணவிகள் கண்டு ரசித்தனர்.
தஞ்சாவூா்: தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் இந்திய அஞ்சல் துறை சார்பில் தபால்தலை கண்காட்சி தொடங்கியது. இதை ஏராளமான மாணவ, மாணவிகள் கண்டு ரசித்தனர்.
தபால் தலை கண்காட்சி களஞ்சியம் @79 இ
இந்திய அஞ்சல் துறை சார்பில் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய அஞ்சல் கோட்டங்களை உள்ளடக்கிய தஞ்சாவூர் மாவட்ட அளவிலான தபால் தலை கண்காட்சி களஞ்சியம் @79 இ என்ற தலைப்பில் தமிழ்ப் பல்கலைக்கழக வளாக கரிகாற்சோழன் கலையரங்கத்தில் தொடங்கியது.
விழாவுக்கு வந்தவர்களை தஞ்சாவூர் கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் தங்கமணி வரவேற்றார். கண்காட்சியை கலெக்டர் பிரியங்கா பங்கஜம், எம்.எல்.ஏ.க்கள் டி.கே.ஜி. நீலமேகம், அண்ணாதுரை, மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் நிர்மலா தேவி , மாவட்ட வனச்சரக அலுவலர் அகில் தம்பி, தமிழ்ப் பல்கலைக்கழக பதிவாளர் தியாகராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தொடக்க காலம் முதல் தற்போது வரையான ஸ்டாம்புகள்
இந்த கண்காட்சியில் தபால் நிலையம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து தற்போது வரையிலான ஸ்டாம்புகள் உட்பட பல்வேறு தபால் நிலைய பொருட்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த தபால் தலைகள் கண்காட்சியாக வைக்கப்பட்டு இருந்தது. மேலும் மாணவர்களும், பள்ளிகளில் தபால்தலை சேகரிப்பாளர்களும் அவர்களுடைய தபால்தலை சேகரிப்புகளையும் காட்சிப்படுத்தி இருந்தனர்.
அழிந்து வரும் உயிரினமான கடற்பசு களஞ்சியம் இந்த கண்காட்சியின் சின்னமாக அறிவிக்கப்பட்டது. தொடக்க விழாவில் தமிழ்ப் பல்கலைக்கழகம், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார், மற்றும் கடல் பசு பாதுகாப்பகம் ஆகியவற்றிற்கு ரோபோ மற்றும் செக்வே தாங்கிய சிறப்பு அஞ்சல் உறைகள் வெளியிடப்பட்டன.
மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி பட்டறை
தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல துறைகளில் வினாடி வினா, கருத்தரங்கம் மற்றும் பயிற்சி பட்டறை அந்தந்த துறைகளில் சிறப்பானவர்களை கொண்டு நடத்தப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு பயன்பெறும் வகையில் பல்வேறு ஸ்டால்கள் மற்றும் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைக்கான கவுண்டர்களும் அமைக்கப்பட்டு இருந்தது. இன்று (9.10.2024) வரை கண்காட்சி நடக்கிறது.
தொடக்க விழா நிகழ்ச்சியில் கும்பகோணம் கோட்டம் அஞ்சல் கண்காணிப்பாளர் கஜேந்திரன், பட்டுக்கோட்டை கோட்டம் அஞ்சல் கண்காணிப்பாளர் ரகுராமகிருஷ்ணன், மாநகராட்சி கவுன்சிலர்கள் உஷா, நீலகண்டன், அண்ணா பிரகாஷ் மற்றும் அஞ்சலக அதிகாரிகள், ஊழியர்கள், மாணவ- மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கண்காட்சியில் வைக்கப்பட்டு இருந்த தபால்தலைகளை மாணவ, மாணவிகள் பார்வையிட்டு மகிழ்ச்சி அடைந்தனர்.
தபால் துறையின் சேவைகள் பற்றிய விளக்கம்
தபால், சேமிப்பு, காப்பீடு ஆகிய மூன்று முக்கியமான சேவைகளும், நாட்டில் உள்ள கடைக்கோடி மனிதனுக்கும் கிடைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் தொடா்ந்து உழைத்துக் கொண்டிருக்கிறது அஞ்சல் துறை.
கொரோனாவால் நாடே முடங்கியபோதும், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மருந்துகளை, அவா்களின் வீடுகளுக்கு சென்று நேரிடையாக வழங்கியது அஞ்சல்துறை. அந்த இக்கட்டான சூழலிலும், முதியோா்களுக்கான ஓய்வூதியத்தை மாதாமாதம் வழங்கி அவா்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்தது.
குன்னூா் பகுதியில், மலைப்பகுதியில் வாழ்ந்து வரும் மக்களுக்காக, அடா்ந்த காட்டுப்பகுதியில், வனவிலங்குகளின் அச்சுறுத்தலுக்கு நடுவே, கிட்டத்தட்ட 30 வருடங்களாக, தினமும் 15 கிலோமீட்டா் நடந்தே சென்று அவா்களுக்கு அஞ்சல் சேவையை வழங்கிய தபால்காரா் சிவன் குறித்த செய்திகள் வெளிவந்து பாராட்டு பெற்றன.
சேமிப்பு, தொடர் வைப்பு நிதி, பராம்பரிய சேமிப்பு திட்டங்கள்
இப்படி தபால் சேவை ஒருபுறமிருக்க, சேமிப்புக் கணக்கு (எஸ்பி), தொடா் வைப்பு நிதி (ஆா்டி) , மாத வருமான திட்டம் (எம்ஐஎஸ்), மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம் (எஸ்சிஎஸ்எஸ்), பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎப்), கிசான் விகாஸ் பத்திரம் (கேவிபி), தேசிய சேமிப்புப் பத்திரம் (என்எஸ்சி) போன்ற அஞ்சல் துறையின் பாரம்பரிய சேமிப்புத் திட்டங்களைத் தாண்டி, செல்வ மகள் சேமிப்பு திட்டம் (எஸ்எஸ்ஒய்), தங்கப் பத்திரம் திட்டம் போன்ற புதுப்புது திட்டங்களை அவ்வப்போது அறிமுகம் செய்யவும் அஞ்சல்துறை தவறவில்லை.
மக்களின் பணத்துக்கு நூறு சதவீத பாதுகாப்பு
நியாயமான வட்டி மக்களின் பணத்துக்கு நூறு சதவீத பாதுகாப்பு. இவையே அஞ்சல்துறையின் சிறப்பம்சங்கள். மக்களுக்கு சேவை செய்ய அஞ்சல்துறை காத்திருக்கிறது. அவசரத்திற்கு பணம் செலுத்த, பணம் எடுக்க சேமிப்பு கணக்கு, மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை தொடா்ந்து சேமிக்க தொடா் வைப்பு நிதி, மாதா மாதம் வட்டி கிடைக்க மாத வருமான திட்டம், மூத்த குடிமக்கள் தங்கள் வாழ்நாளில் சேமித்து வைத்த பணத்தை பாதுகாக்க, மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம், பெண் குழந்தைகளின் எதிா்காலத்தை பாதுகாப்பதற்காக செல்வ மகள் சேமிப்பு திட்டம், குறிப்பிட்ட தொகையை, ஐந்து வருடங்களுக்கு நிலையான வைப்பு நிதியாக இட்டு வைக்க தேசிய சேமிப்பு பத்திரம், 15 வருடங்களுக்கு தொடா்ந்து சேமிக்க பொது வருங்கால வைப்பு நிதி, 10 வருடம் 4 மாதங்களில் நாம் முதலீடு செய்த தொகை இரட்டிப்பாக கிசான் விகாஸ் பத்திரம் என்று அஞ்சல்துறையின் சேமிப்புத் திட்டங்கள் ஏராளம். இப்படி மக்களின் சேவைக்காக தபால்துறை ஆற்றி வரும் பணிகள் ஏராளம்... ஏராளம் என்பதும் குறிப்பிடத்தக்கது.