சாலை அகலப்படுத்தும் பணிகள்... நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு
தஞ்சை நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டம் சார்பில் பல்வேறு சாலைகள் அகலப்படுத்தப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் 8-ம் நம்பர் கரம்பையில் இருந்து ஆலக்குடி வரையிலான ஒருவழிப்பாதையை இருவழிப்பாதையாக அகலப்படுத்தும் பணி ரூ.4.45 கோடி மதிப்பில் 4.6 கி.மீ. தூரத்துக்கு நடந்து வருகிறது. இதை நெடுஞ்சாலைத்துறை உதவிக்கோட்ட பொறியாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தஞ்சை நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டம் சார்பில் பல்வேறு சாலைகள் அகலப்படுத்தப்பட்டு வருகிறது. தஞ்சை மற்றும் ஆலக்குடி, சித்திரக்குடி, பூதலூர், திருக்காட்டுப்பள்ளி, ஆவாரம்பட்டி, புதுகல்விராயன்பேட்டை உட்பட பல பகுதிகளுக்கு செல்லும் சாலையாக 8ம் நம்பர் கரம்பை உள்ளது. இதனால் எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் விவசாய பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களும் சென்று வரும்.
கரம்பை வழியாக வண்ணாரப்பேட்டைக்கு அரசு பேருந்து இயக்கப்படுகிறது. மேலும் கார் மற்றும் பைக்குகள் தினமும் சென்று வருகின்றன. இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக வேலை முடிந்து பைக்குகளில் வருபவர்கள் அதிகம் பேர் உள்ளனர். முக்கியமாக பூதலூர், கல்விராயன்பேட்டையில் இருந்து தஞ்சாவூருக்கு வேலைக்கு சென்றுவிட்டு இரவு நேரத்தில் பணி முடிந்து திரும்புகின்றனர். இதனால் இரவு நேரத்திலும் இப்பகுதியில் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். இந்த சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
8-ம் நம்பர் கரம்பையில் இருந்து ஆலக்குடியில் உள்ள கல்லணைக்கால்வாய் பாலம் வரையிலான சாலை குறுகலாகவும், போக்குவரத்துக்கு இடையூறாகவும் இருந்தது. இதனால் இந்த சாலையை அகலப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை இ்நத சாலையை இருவழிப்பாதையாக அகலப்படுத்த முடிவு செய்தது.
அதன்படி 8ம் நம்பர் கரம்பையில் இருந்து சிவகாமிபுரம் வரை தற்போது சாலையின் இருபுறமும் பள்ளம் தோண்டப்பட்டு, ஜல்லிக்கற்கள் பரப்பப்பட்டு அகலப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் நிறைவடைந்த உடன் 8-ம் நம்பர் டவுன் கரம்பையில் இருந்து சிவகாமிபுரத்திலிருந்து ஆலக்குடியில் உள்ள கல்லணைக்கால்வாய் பாலம் வரையிலான மொத்தம் 4.6 கி.மீ. நீளத்துக்கு ரூ.4 கோடியே 45 லட்சம் செலவில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஒருங்கிணைந்த சாலைகள் உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் (2025-26) இந்த பணிகள் நடைபெற்று வருகிறது இந்த சாலை பணிகளின் நீளம் அகலம் மற்றும் தரம் குறித்து தஞ்சை (நெடுஞ்சாலைத்துறை) தரக் கட்டுப்பாடு உதவிக் கோட்டப் பொறியாளர் ரேணுகோபால் மற்றும் குழுவினர் ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது தஞ்சை உதவி கோட்ட பொறியாளர் கீதா, உதவி பொறியாளர்கள் செல்வகுமார் மற்றும் லட்சுமி பிரியா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.





















