சாலையை மறித்து மறியல் மாநாடு... கால்நடைகளால் கதறும் வாகன ஓட்டுனர்கள்
தஞ்சை அருகே ரெட்டிப்பாளையம் நால்ரோடு பகுதியில் தொடங்கி சிங்கப்பெருமாள் குளம் வரை சாலையிலேயே மாடுகள் அமர்ந்து அசைப்போட்டு கொண்டு நகர்வதில்லை.

தஞ்சாவூர்: சாலையை மறித்து வாகனங்கள் செல்ல வழிவிடாமல் மறியல் மாநாடு நடத்தும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்று வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சை அருகே ரெட்டிப்பாளையம் நால்ரோடு பகுதியில் தொடங்கி சிங்கப்பெருமாள் குளம் வரை சாலையிலேயே மாடுகள் அமர்ந்து அசைப்போட்டு கொண்டு நகர்வதில்லை. இந்த சாலை வழியாக வண்ணாரப்பேட்டை, 8 கரம்பை, ஆலக்குடி, சித்திரக்குடி, பூதலூர் செல்பவர்களும் சக்கரசாமந்தம், களிமேடு, சீனிவாசபுரம் உட்பட பல பகுதிகளுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பைக்குகள், கார்கள் சென்று வருகின்றன. மேலும் ஆலக்குடி, சித்திரக்குடி, பூதலூர் பகுதியை சேர்ந்தவர்கள் பணி முடித்து இரவில் இந்த சாலை வழியாகத்தான் வீட்டிற்கு திரும்ப வேண்டும்.
இப்படி வாகனங்கள் போக்குவரத்து அதிகம் நிறைந்த இந்த பகுதியில் சாலை முழுவதையும் அடைத்துக் கொண்டு மாடுகள் அமர்ந்து உள்ளன. மேலும் பல மாடுகள் தங்களுக்கு மோதிக் கொண்டு வாகனங்கள் செல்லும் போது குறுக்கே ஓடுகிறது. பைக்குகளில் செல்பவர்கள் தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். தற்போது மழை வேறு பெய்து வருவதால் சாலையை விட்டு வாகனத்தை இறக்கி ஓட்ட முடியாத நிலையும் உள்ளது.
தஞ்சாவூர் சிங்கபெருமாள் குளம் தொடங்கி ரெட்டிப்பாளையம் நால்ரோடு வரையில் ஒன்றல்ல, இரண்டல்ல டஜன் கணக்கில் சாலையிலேயே மாடுகள் மாநாடு நடத்துகின்றன. இதனால் எதிர்எதிரில் வாகனங்கள் வரும் போது மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இந்த மாடுகளுக்கு பயந்து கொண்டு வாகனத்தை மெதுவாக இயக்கி செல்லும் நிலை உள்ளது.
மேலும் வாகன ஓட்டுனர்கள் யாராவது ஹாரன் அடித்தால் மிரண்டு எழுந்து ஓடும் மாடுகள் வாகனங்களை மோதி தள்ளிவிடுகின்றன. இந்த பகுதி வழியாக பெண்கள் நடந்து செல்லவும் அச்சப்படுகின்றனர். வயதானவர்களும் மாடுகள் முட்டி காயமடைந்த சம்பவங்களும் நடந்துள்ளது. எனவே சாலைகளில் சர்வ சுதந்திரமாக சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






















