நாளை பொங்கலோ பொங்கல்...! - பானையை அலங்கரிக்கும் மஞ்சள் கிழங்கு விற்பனை மும்முரம்
பொங்கல் விழாவினை முன்னிட்டு தஞ்சை மாவட்டம் ஆறு, வாய்க்கால்கள்,ஏரிகளின் பாசனம் மற்றும் மின் மோட்டார் தண்ணீரை கொண்டு சுமார் 500 ஏக்கரில் இஞ்சி, மஞ்சள் கிழங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளது
பொங்கல் விழா வரும் ஜனவரி மாதம் 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு சா்க்கரை மற்றும் வெண் பொங்கலிட்டு சூரிய பகவானுக்கு வைத்து வழிபடுவார்கள். பொங்கல் வைக்கும் பானைகளின் கழுத்தில் மஞ்சள் மற்றும் இஞ்சி கிழங்கை சுற்றி கட்டியும், பூஜையறையில் இஞ்சி, மஞ்சள் கிழங்கு செடியை வைத்து கொண்டாடுவார்கள்.இனி வரும் வாழ்க்கை மங்களகரமாக இருக்க வேண்டும் என்பதற்காக மஞ்சள் கிழங்கு செடியை வைத்தும், நோய் கிருமிகள் அனுகாமல் இருப்பதற்காக இஞ்சி, மஞ்சள் கிழங்கு செடியை கட்டி வைப்பார்கள்.
இந்நிலையில் பொங்கல் விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டம் திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, பூதலுார், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, கும்பகோணம், பாபநாசம், பட்டீஸ்வரம், தேனாம்படுகை, கோபிநாதபெருமாள் கோயில், முழையூர், திருமேற்றழிகை, சுந்தர பெருமாள் கோயில், திருவிடைமருதுார், திருப்பனந்தாள், நாச்சியார் கோயில், ஆடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 க்கும் மேற்பட்ட ஏக்கரில் இஞ்சி, மஞ்சள் கிழங்கு செடியை சாகுபடி செய்துள்ளனா். அவர்கள் வரும் பொங்கல் தினத்தின் முன்பாக வெட்டி எடுத்து வியாபாரத்திற்காக அனுப்பி வைப்பார்கள். ஆனால் தற்போது பனி அதிகமாக காலை மற்றும் மாலை வேளைகளிலும், பகல் நேரங்களில் வெயில் பலமாக அடிப்பதால், மஞ்சள் செடியின் தோகைகள் கருகி, கிழங்கு பெருக்காமல் அப்படியே சுருங்கி விட்டது. இதனால் அதனை தென்னை ஒலை மற்றும் பிளாஸ்டிக்களை போட்டு மூடி வைத்து வியாபாரம் செய்கின்றனர். இதனால் இஞ்சி, மஞ்சள் செடி கொத்துக்கள் விலை போகுமா என்பது கேள்வி குறியாகியுள்ளது.
இது குறித்து மாங்குடி விவசாயி கூறுகையில்,பொங்கல் விழாவினை முன்னிட்டு தஞ்சை மாவட்டம் ஆறு, வாய்க்கால்கள், ஏரிகளின் பாசனம் மற்றும் மின் மோட்டார் தண்ணீரை கொண்டு சுமார் 500 ஏக்கரில் இஞ்சி, மஞ்சள் கிழங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பொங்கலை முன்னிட்டு கடந்த வைகாசி மாதம் பயிரிடப்பட்டு, மார்கழி மாத இறுதியில் அறுவடை செய்வார்கள்.இந்நிலையில் கடந்த சில நாட்களாக கடுமையான அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் பனி பொழிவும், பகல் நேரங்களில் வெயில் அடிப்பதால், மஞ்சள் கிழங்கு செடியின் தோகைகள் கருகி விட்டது. மேலும் போதுமான தண்ணீர் சத்துக்கள் இல்லாமல் கிழங்குகள் பெருக்காமல் சுருங்கி விட்டது.
ஒரு மஞ்சள் செடியில் நல்ல வளா்ச்சியுடன் இருந்தால் சுமார் 5 கிழங்கு வரை இருக்கும், வளா்ச்சி இல்லை என்றால் ஒரு கிழங்கு இருப்பதே சிரமம் அதுவும் பெருக்காமல், சுருங்கி சிறுத்து விடும். அதனால் கட்டுபடியான விலை போகாது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையின் காரணமாக விளைச்சல் குறைவானதால் ஒரு மஞ்சள் கிழங்கு கொத்தின் விலை ரூ.30 வரை விற்பனை செய்யப்பட்டது. அதே போல் பனியினால் விளைச்சல் குறைவானதால் இந்த ஆண்டு விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. வயல்களில் நெற்பயிர்கள் மற்ற பயிர்கள் அதிக அளவில் விளைச்சல் காண வேண்டும் என்பதற்காக விவசாயிகள் ரசாயன உரங்களை தெளித்து விடுகின்றனா். அதனால் விளைச்சல் அசிகமானாலும், விளையும் பொருட்களில் நச்சு தன்மையுடன் இருக்கும். அது தெரியாமல் விவசாயிகள் ரசாயன உரங்களை தெளித்து வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக வயல்களில் ரசாயன உரங்களை தெளித்து வந்ததால், மண்ணில் இயற்கை தன்மை குறைந்து சத்துக்கள் இல்லாமல் மலடாகி விட்டது. அதனால் சாதாரண விளையக்கூடிய இஞ்சி, மஞ்சள் கிழங்கு, பல்வேறு நோய்களும், தோகைகள் கருகியும் நாசமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இது போன்ற பல்வேறு காரணங்களால் வரும் பொங்கல் பண்டிகையின் போது இஞ்சி, மஞ்சள் கிழங்கின் விலை உயா்வதற்கு அதிக வாய்ப்புள்ளது.