நாங்க இருக்கோம்... தஞ்சாவூர், கும்பகோணத்தில் தீபாவளிக்காக காவல் உதவி மையங்கள் திறப்பு
தீபாவளி பண்டிகை வரும் 20ம் தேதி உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பொதுமக்கள் புதிய ஆடைகள், இனிப்புகள் போன்றவற்றை வாங்குவதற்காக கடைத்தெருக்களில் குவிந்து வருகின்றனர்,

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் தீபாவளி பண்டிகைக்காக காந்திஜி சாலையில் காவல் உதவி மையத்தை மாவட்ட எஸ்பி ராஜாராம் திறந்து வைத்தார்.
தீபாவளி பண்டிகை வரும் 20ம் தேதி உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது இதற்காக பொதுமக்கள் புதிய ஆடைகள், இனிப்புகள் போன்றவற்றை வாங்குவதற்காக கடைத்தெருகளில் குவிந்து வருகின்றனர். தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தை சுற்றி அதிக அளவில் வர்த்தக நிறுவனங்கள் அமைந்துள்ளன. குறிப்பாக ஸ்வீட் ஸ்டால், நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள் என ஏராளமாக உள்ளன.
சாதாரண நாட்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இப்பகுதிகளில் மக்கள் நெருக்கடி அதிக அளவில் இருக்கும். விழா காலங்களில் காந்திஜி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்றுப்பாதையில் அனுப்பப்படும். அந்த அளவிற்கு மக்கள் நெருக்கடி மிகுந்த சாலையாக காந்திஜி சாலை உள்ளது.

தீபாவளி பண்டிகையின்போது ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் ஜவுளிகள் எடுக்க குவிந்து விடுவார்கள். இதனால் பல்வேறு சிரமங்களை போக்கும் விதத்திலும் பொதுமக்கள் பாதுகாப்பிற்காகவும் காந்திஜி சாலை மணிக்கூண்டு அருகில் காவல் உதவி மையத்தை மாவட்ட எஸ்பி ராஜாராம் திறந்து வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், தீபாவளி பண்டிகை முன்னிட்டு மக்கள் நெருக்கடி மிகுந்த இந்த காந்திஜி சாலையில் காவல் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. காவல் உதவி மையம் பொதுமக்களில் பிரச்சனைகள் குறித்து உடனுக்குடன் தீர்வு காண்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது..
தஞ்சை நகரின் அனைத்து பகுதியிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மொத்தம் 800 கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு பணிகள் நடந்து வருகிறது. மேலும் தீபாவளி பண்டிகைக்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் பாதுகாப்பான தீபாவளியை கொண்டாட வேண்டும். குழந்தைகளை தனியாக வெளியே வெடிக்க அனுப்பக்கூடாது. நீளமான ஊதுபத்தியை கொண்டு வெடி வெடிக்க குழந்தைகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும். பெற்றோர்களும் குழந்தைகள் வெடி வெடிக்கும் போது அருகிலேயே இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதில் நகர டிஎஸ்பி சோமசுந்தரம், மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கலைவாணி, போக்குவரத்து காவல் பிரிவு இன்ஸ்பெக்டர் எம்.ஜி. ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
கும்பகோணத்தில் காவல் உதவி மையம்
தீபாவளி பண்டிகையையொட்டி கும்பகோணம் கடைவீதியில் பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. பொதுமக்கள் தினமும்பொருட்கள் வாங்கி சென்றாலும் கூட்டம் குறைந்த பாடில்லை. கும்பேஸ்வரர் கோவில் முதல் பழைய மீன் மார்க்கெட் வரை செல்லும் சாலை மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.
கும்பகோணத்தில் பொதுமக்கள் கூட்டத்தினை பயன்படுத்தி குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் காவல் உதவி மையம் திறக்கப்பட்டது. கும்பகோணம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அங்கித்சிங் தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் கலந்து கொண்டு திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- இடர்பாடு இல்லாத தீபாவளியை உறுதி செய்யும் வகையில் காவல் உதவி மையம் கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோவில் பகுதியில் தொடங்கப்பட்டுள்ளது.
24 மணி நேரமும் போலீசார் சுழற்சி முறையில் பணியாற்றும் வகையில் இந்த காவல் உதவி மையம் இயங்கிக் கொண்டிருக்கும். கும்பகோணம் மாநகராட்சி 350 கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. இந்த கேமராக்களுடன் சேர்த்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் 35 கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளது. காவல் உதவி மையத்தில் இருந்து அனைத்து கடைவீதிகளுக்கும் உத்தரவுகள், அறிவிப்புகள், விழிப்புணர்வு வழங்கும் வகையில் ஒலி பெருக்கிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்காக இடங்கள் கண்டறியப்பட்டு வாகனம் நிறுத்தும் இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே உள்ள டெல்டாகோப் ரோந்து வாகனங்களுடன் கூடுதல் 5 ரோந்து வாகனங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. உச்சிப்பிள்ளையார் கோவில் முதல் பழைய மீன் மார்க்கெட் வரை நடந்து போலீசார் நடந்து சென்று ரோந்து பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பண்டிகை காலம் என்பதால் கனரக வாகனங்கள் மாநகராட்சிக்குள் வருவதற்கான நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மாற்றம் தேவையை பொருத்து அந்தந்த நேரங்களில் முடிவெடுத்து மாற்றி விடப்படும் என்றார். போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சிவசெந்தில்குமார்(கிழக்கு), ரமேஷ்(மேற்கு), சரவணக்குமார் (போக்குவரத்து) மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.





















