11 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நீரில் மூழ்கியுள்ள நெற் பயிர்கள்: தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் சோகம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா, தாளடி பருவத்தில் 3.30 லட்சம் ஏக்கரில் நெற் பயிர்கள் நடவு செய்யப்பட்டுள்ளன.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர் மழையால் ஏறத்தாழ 11 ஆயிரத்து 250 ஏக்கரில் சம்பா, தாளடி பருவ நெற் பயிர்கள் மூழ்கி உள்ளன. இதனால் விவசாயிகள் பெரும் வேதனையில் உள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா, தாளடி பருவத்தில் 3.30 லட்சம் ஏக்கரில் நெற் பயிர்கள் நடவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், டிட்வா புயல் காரணமாக மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதல் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை இன்றும் தொடர்ந்து நீடித்ததால், வடிகால் வாய்க்கால்களில் அடைப்பு உள்ள பகுதிகளில் வடிந்து செல்ல வழியில்லாமல், வயல்களுக்குள் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
இதனால், ஒரத்தநாடு வட்டத்துக்கு உள்பட்ட பருத்திக்கோட்டை, ஆதனக்கோட்டை, பொன்னாப்பூர், அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நடவு செய்யப்பட்ட 20 நாட்களான சம்பா, தாளடி பருவ நெற் பயிர்கள் நீரில் மூழ்கின. இதுபோல, மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் ஏறத்தாழ 11 ஆயிரத்து 250 ஏக்கரில் நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இப்பகுதிகளிலுள்ள வடிகால் வாய்க்கால்களில் ஆகாயத்தாமரை உள்ளிட்ட செடிகள் அடர்ந்துள்ளதால், வயல்களில் மழை நீர் வடிந்து செல்ல வாய்ப்பில்லாமல் தேங்கி நிற்கிறது. வயல்களில் தொடர்ந்து தண்ணீர் தேங்கி நின்றால் பயிர்கள் அழுகிவிடும் என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர்.
எனவே, வடிகால் வாய்க்கால்களில் உள்ள அடைப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால், பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இப்பயிர்களை வேளாண் துறை அலுவலர்கள் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல் நெய்வாசல் பகுதியில் சுமார் 200 ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தை பொருத்தவரை அதிகபட்சமாக குருங்குளம் பகுதியில் 13 சென்டிமீட்டரும். நெய்வாசல் தென்பாதி பகுதியில் 11 சென்டிமீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது.
இந்நிலையில் நெய்வாசல் குலமங்கலம் பகுதியில் நடவு நட்டு ஒரு மாதமேயான இளம் சம்பா பயிர்கள் சுமார் 200 ஏக்கருக்கு மேல் நீரில் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளது.. வல்லம் வடிகால் வாரியில் முழு கொள்ளளவு தண்ணீர் செல்வதால் வடிகால் நீர் நேரடியாக வயலுக்குள் புகுந்துள்ளது. இதனால் மேலும் பல நூறு ஏக்கரில் சம்பா பயிர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கடும் சோகத்தில் உள்ளனர். குறுவை சாகுபடிக்கு வாங்கிய கடனையே அடைக்க முடியாத நிலையில் மேலும் கடன் வாங்கி சம்பா, தாளடி பயிர் சாகுபடி செய்துள்ளோம். ஆனால் தற்போதைய டிட்வா புயல் காரணமாக கனமழை பெய்து வருவதால் சாகுபடி பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
மழை தொடர்ந்தால் இளம் சம்பா நாற்றுகள் அழுகி சேதமடையும், இதனால் மீண்டும் புதிதாக நாற்று நட வேண்டிய சூழல் ஏற்படும். இது எங்களுக்கு மேலும் கடன் சுமையை அதிகரிக்கும் வகையில் உள்ளது என்று விவசாயிகள் தரப்பில் வேதனையுடன் தெரிவித்தனர்.






















