ஓய்வுபெற்ற கணக்காளரை டிஜிட்டல் அரெஸ்ட் என மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்த மர்ம நபர்கள்
ட்ராய் அமைப்பிலிருந்து பேசுவதாகவும், உங்கள் ஆதார் எண்ணை வைத்து வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு, பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்த முதியவரை டிஜிட்டல் அரெஸ்ட் என்ற பெயரில் மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்த மர்மநபர்களை சைபர் க்ரைம் போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தனியார் கணக்காளரிடமிருந்து ரூ.15.20 லட்சம் முறைகேடாக ஆன்லைன் வழியாக மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்களை சைபர் க்ரைம் போலீஸார் தேடி வருகின்றனர்.
திருவிடைமருதூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன்(65) இவர் தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவருக்கு கடந்த 22.9.2025 அன்று செல்போனில் ஒரு அழைப்பு வந்துள்ளது. எதிர்முனையில் பேசியவர், தான் ட்ராய் அமைப்பிலிருந்து பேசுவதாகவும், உங்கள் ஆதார் எண்ணை வைத்து வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு, பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். எனவே, மும்பை போலீஸார் உங்களை தொடர்பு கொள்வார்கள் என தெரிவித்துவிட்டு, தொடர்பை துண்டித்துள்ளார்.
பின்னர், சிறிது நேரம் கழித்து மும்பை போலீஸில் இருந்து பேசுகிறோம், உங்கள் ஆதார் எண்ணை வைத்து நரேஷ் கோயல் என்பவர் 100 வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு, ரூ.600 கோடிக்கு மேல் மோசடி செய்து கைதாகி உள்ளார். இதனால் உங்கள் மீது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, மன்னிப்பு கடிதம் எழுதி அனுப்புங்கள், வீட்டில் வேறு யார் உள்ளனர் என கேட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணியன், வீட்டில் தானும், தனது மனைவியும் இருப்பதாக கூறி, பின்னர் மன்னிப்பு கடிதமும் எழுதி அனுப்பியுள்ளார்.
தொடர்ந்து அவரது செல்போன் எண்ணுக்கு மும்பை போலீஸ் என தெரிவித்து, இரண்டு பிடிஎப் பைல்கள் அனுப்பப்பட்டுள்ளது. அதில் சுப்பிரமணியனுக்கு அரஸ்ட் வாரண்டுக்கான ஆர்டர் காப்பி என தெரிவித்து இருந்துள்ளது. மீண்டும் அவர்கள் சுப்பிரமணியனை தொடர்பு கொண்டு, நாங்கள் கூறும் வங்கி கணக்குக்கு பணம் அனுப்புங்கள், உங்கள் மீது தவறு இல்லை என தெரியவந்தவுடன், நாங்கள் பணத்தை திருப்பி அனுப்புவோம் எனக் கூறி தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சுப்பிரமணியன் கடந்த 23.9.2025ம் தேதி ஒரே தவணையில் ரூ.15.20 லட்சத்தை அனுப்பியுள்ளார்.
மீண்டும் தன்னை தொடர்பு கொண்ட எண்ணில் சுப்பிரமணியன் அவர்களை தொடர்பு கொள்ள முயன்றபோது, அந்த எண் சுவிட்ச் ஆப் என்று வந்துள்ளது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், தஞ்சாவூர் சைபர் க்ரைம் போலீஸில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
டிஜிட்டல் அரஸ்ட், ஆன்லைன் டிரேடிங் என வரும் அழைப்புகளை பொதுமக்கள் யாரும் நம்பி பணம் அனுப்ப வேண்டாம், அது முழுவதும் பொய்யான அழைப்பு எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இதேபோல் வீட்டிலேயே வேலை என்ற பெயரில் சமூக வலைதளத்தில் வரும் லிங்கை பயன்படுத்தக்கூடாது. பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். வெளிநாட்டில் வேலைவாய்ப்பு, உங்களுக்கு பரிசு பொருட்கள் வந்துள்ளது என்பது போன்ற அழைப்புகள் சைபர் க்ரைம் ஆக இருக்கலாம். எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சைபர் க்ரைம் போலீஸார் தெரிவித்துள்ளனர்.





















