Moi Virundhu Thanjavur: ரூ.10 கோடிப்பே.. 10 கோடி..தஞ்சை மாவட்டத்தை அசரடித்த திமுக எம்.எல்.ஏ வீட்டு மொய் விருந்து..
தஞ்சை மாவட்டத்தில் பேராவூரணி எம்.எல்.ஏ என்.அசோக்குமார் நடத்திய மொய் விருந்தில் ரூ.10 கோடி வசூலாகி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி எம்எல்ஏ என்.அசோக்குமார் நடத்திய காதணி விழா மற்றும் மொய் விருந்தில் சுமார் ரூ.10 கோடி வசூலாகியது. இது போன்ற மொய் விருந்தில் அதிக வசூலானது இதுதான் என்று பலரும் தெரிவிக்கின்றனர்.
மொய் விருந்து
தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஆடி, ஆவணி மாதங்களில் மொய் விருந்து நடத்துவது என்பது பிரபலம். ஒருவர் 5 ஆண்டுக்கு ஒரு முறை இந்த மொய் விருந்தை நடத்துவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கஜா புயல் தாக்குதல்,பின்னர் கொரோனா பரவலால் இந்த மொய் விருந்து நடத்தப்படாமல் இருந்தது.
தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆடி மாதத்திலும், தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியில் ஆவணி மாதத்திலும் இந்த மொய் விருந்து என்பது, நடப்பாண்டு தொடங்கி சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இதில் பலரும் ஒன்றிணைந்தும், தனித்தனியாகவும் மொய் விருந்து நடத்துவது வழக்கம்.
எம்எல்ஏ என்.அசோக்குமார்
இதுபோன்ற மொய் விருந்துகளில் லட்சக்கணக்கில் வசூல் ஆவது தொடர்ந்து நடந்து வருகிறது. இது வட்டி இல்லாத கடன் போன்று ஒன்றாகும். அந்த வகையில் பேராவூரணி திமுக எம்எல்ஏ என்.அசோக்குமார் பேராவூரணியில் தனது பேரக்குழந்தைகளுக்கு காதணி விழாவும், மொய் விருந்தையும் நடத்தினார்.
இதற்காக 1,500 கிலோ ஆட்டுக்கறி சமையல் செய்யப்பட்டு 15 ஆயிரம் பேருக்கு அசைவ உணவு பரிமாறப்பட்டது. 500க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள், உணவு பரிமாறினர். 40 நிலையங்கள் அமைக்கப்பட்டு மொய் வாங்கப்பட்டது.
வங்கி அதிகாரிகள்
மொய் விருந்தில் சுமார் ரூ.10 கோடி வரை பணம் வசூலானது. பணத்தை வங்கி அதிகாரிகள் மொய் பிடித்த மண்டபத்துக்கே வந்து எண்ணினர். இப்பகுதியில் தனி நபர் நடத்திய மொய் விருந்தில் அதிகமாக எம்எல்ஏ-வுக்குதான் வந்துள்ளதாக எம்எல்ஏ-வின் ஆதரவாளர்கள் பலரும் தெரிவித்தனர்.
இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், இதுபோன்ற மொய் விருந்துகளில் வசூல் ஆகும் பணம் மொய் விருந்து நடத்துபவர்கள், தங்களின் கடன்களை அடைப்பதற்கு பயன்படுத்திக் கொள்வர். இது வட்டி இல்லாத கடன் போன்றது. மற்றவர்கள் மொய் விருந்து வைக்கும் பொழுது இவர்களும் அங்கு சென்று பணம் செய்வார்கள். அவசர தேவைகள், தொழில் தொடங்க, வெளிநாடு செல்ல இந்த பணத்தை பயன்படுத்தி கொள்வர்.
ஜாதி, மதம் கடந்த விருந்து
ஜாதி, மதம் கடந்து, அனைத்து மக்களையும் ஒற்றை இழையில் இணைக்கும் பொருளாதார பந்தமாக மொய் விருந்து பார்க்கப்படுகிறது. கமகமக்கிற கறி விருந்து, கோடிகளில் பண பரிவர்த்தனை என பல்வேறு சுவாரஸ்யங்கள் இதற்குள் இருக்கின்றன.
திருமணம், காது குத்து போன்ற சுப காரியங்களாகட்டும், மரணம் போன்ற துக்க சம்பவங்கள் ஆகட்டும், சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்பார்கள். அவர்களை மீட்கும் வகையில் நிகழ்வுக்கு வருபவர்கள் தங்களால் இயன்ற தொகையை அக்குடும்பத்தினருக்கு மொய்யாக எழுதுவது வழக்கம். இந்த மனிதாபிமானத்தில் இருந்து துளிர்த்தது தான் மொய்விருந்து. கடந்த 20 ஆண்டுகளில் இந்த மொய் விருந்து பல்வேறு பரிமாணங்களை எடுத்து விட்டது. சுபகாரியங்களில் மட்டுமே நடத்தப்பட்ட மொய்விருந்து, இன்று தனி உருவெடுத்து மொய்விருந்து விழாவாகவே நடக்கிறது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.