மயிலாடுதுறை மாவட்டத்தில் 3000 ஹெக்டேர் பயிர்கள் பாதிப்பு - அமைச்சர் மெய்யநாதன்
கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை சுற்றுச் சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் வட்டாரத்திற்கு உட்பட்ட நல்லூர் கிராமத்தில் மழைநீரில் சூழ்ந்துள்ள சம்பா சாகுபடி பயிர்களை சுற்றுச் சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியபோது சுற்றுச் சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின் பெயரில் மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக மூன்று நாட்களாக பெய்த கனமழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு அங்கு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உடனடியாக செல்ல வேண்டும் என எங்களுக்கு உத்தரவிட்டார்.
அந்த அடிப்படையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டோம். மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் மாவட்ட ஆட்சியர், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரும் பார்வையிட்டுள்ளனர். கடந்த மூன்று நாட்களில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தம் 16 செ.மீ மழை பதிவாகி உள்ளது. குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் 1088 ஹெக்டேரில் பயிரிடப்பட்ட நெற்பயிரானது மழைநீரால் சூழ்ந்துள்ளது. அதேபோல கொள்ளிடம் பகுதியில் 1200 ஹெக்டேரில் பயிரிடப்பட்ட நெற்பயிரானது மழைநீரால் சூழ்ந்துள்ளது. செம்பனார்கோயில் பகுதியில் சுமார் 600 ஹெக்டேரில் பயிரிடப்பட்ட நெற்பயிரானது மழைநீரால் சூழ்ந்துள்ளது.
ஆக மொத்தம் சுமார் 3000 ஹெக்டேரில் பயிரிடப்பட்ட நெற்பயிரானது மழைநீரால் சூழ்ந்துள்ளது. தற்போது மழை நின்றுவிட்டதால் தண்ணீரானது வடிய தொடங்கி இருக்கிறது. இந்த கனமழைக்கு 39 கால்நடைகள் உயிரிழந்து உள்ளது. அதேபோல் கூரை வீடுகள், ஓட்டு வீடுகள் என 150 வீடுகள் கனமழையினால் சேதமடைந்துள்ளது. இவை அனைத்திற்கும் மாவட்ட ஆட்சியர் உரிய ஆய்வுகள் மேற்கொண்டு அதற்குறிய நிவாரணம் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்வார். நேற்று சீர்காழி தாலுக்கா, காத்திருப்பு ஊராட்சியில் உயிரிழந்த கனகராஜ் என்ற விவசாயின் குடும்பத்திற்கு உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை உடனடியாக வழங்கியுள்ளோம்.
மேலும் பொதுமக்கள், மழையினால் பாதிப்பு குறித்து உடனடியாக தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறைக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் பாதிப்பு குறித்து மக்கள் தெரியப்படுத்தயுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் வடகிழக்கு பருவமழையில் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளிலிருந்து மீட்டெடுக்க மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறையினர், தீயணைப்புத்துறையினர், பேரிடர் மீட்புக் குழுவினர் ஆகியோர்கள் தயார் நிலையில் இருக்கின்றனர். விவசாயிகளின் கோரிக்கையாக உப்பனாறு ஆழப்படுத்த வேண்டும், வடிகால் சரிசெய்ய வேண்டும், பழைய கதவணைகளை எடுத்துவிட்டு புதிய கதணைகள் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள். இக்கோரிக்கைகள் அனைத்தும் உடனடியாக சரிசெய்யப்படும்.
விவசாயிகளின் பயிர் காப்பீடு திட்டத்தில் கடந்த ஆண்டு 34 கோடி ரூபாய் காப்பீடு நிறுவனத்திலிருந்து பெற்றுத் தந்துள்ளோம். அதே போன்று இந்தாண்டு கணக்கீடு செய்து வழங்கப்படும். இந்தாண்டு பயிர் காப்பீடு செய்ய சுமார் 68 ஆயிரம் ஹெக்டேருக்கு சுமார் 52 ஆயிரம் ஹெக்டேருக்குத்தான பயிர் காப்பீடு விவசாயிகள் செய்துள்ளனர். பயிர் காப்பீடு செய்ய இந்த மாதம் 22 -ம் தேதி வரை கால நீட்டிப்பை தமிழ்நாடு முதலமைச்சர் பெற்றுத்தந்துள்ளார்கள். எனவே விவசாயிகள் இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். விவசாயிகள் பாதிக்காத வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அரசு செயல்பட்டு வருகிறது. இவ்வாறு தெரிவித்தார்.
இவ்வாய்வின்போது மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகளின் திட்ட இயக்குநர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சேகர், நீர்வளத்துறை செயற்பொறியாளர் சண்முகம், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா, கொள்ளிடம் ஒன்றியக்குழுத்தலைவர் ஜெயப்பிரகாஷ் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.