ஆன்லைன் டிரேடிங்கில் அதிக லாபம் என கூறி மெக்கானிக்கல் இன்ஜினியரிடம் பணம் மோசடி
டிரேடிங்கில் அதிகம் சம்பாதிக்கலாம் எனக் கூறி பலரும் பலவிதமான கருத்துகளை பகிர்ந்துள்ளனர். பின்னர் ராஜ்குமாரை தொடர்பு கொண்ட மர்ம நபர், ஒரு செயலிலை கூறி டிரேடிங் செய்ய கூறியுள்ளார்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியைச் சேர்ந்த மெக்கானிக்கல் இன்ஜினியரிடம் ஆன்லைன் டிரேடிங்கில் அதிக சம்பாதிக்கலாம் எனக்கூறி ரூ.37.24 லட்சம் மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்களை சைபர் க்ரைம் போலீஸார் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (41). மெக்கானிக்கல் இன்ஜினியர் படிப்பு முடித்துவிட்டு சொந்த ஊரில் விவசாயம் பார்த்து வருகி்றார். ஆன்லைன் டிரேடிங்கில் அனுபவம் வாய்ந்தவர். இவருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர் ஆன்லைன் டிரேடிங்கில் அதிகம் சம்பாதிக்கலாம் எனக் கூறி, இதற்காக வாட்ஸ் அப் குரூப் ஒன்று உள்ளது எனக் கூறி ராஜ்குமாரை அ்ந்த வாட்ஸ் அப் குருப்பில் இணைத்துள்ளார்.
அதில், டிரேடிங்கில் அதிகம் சம்பாதிக்கலாம் எனக் கூறி பலரும் பலவிதமான கருத்துகளை பகிர்ந்துள்ளனர். பின்னர் ராஜ்குமாரை தொடர்பு கொண்ட மர்ம நபர், ஒரு செயலிலை கூறி அதை செல்லில் பதிவிறக்கம் செய்து கொண்டு டிரேடிங் செய்ய கூறியுள்ளார். இதை நம்பிய அவர் அந்த செயலியில் 13 தவணைகளில் ரூ.37.24 லட்சம் பணத்தை செலுத்தியுள்ளார்.
இருப்பினும் அவருக்கு எவ்வித லாபத் தொகையும் வரவில்லை. இதனால் அவர்களை தொடர்பு கொள்ள முயன்றபோது, அந்த எண் சுவிட்ச் ஆப் என்று வந்துள்ளது. மேலும், அந்த செயலியும் மோசடியாக உருவாக்கப்பட்டது என தெரியவந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், தஞ்சாவூர் சைபர் க்ரைம் போலீஸில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
டிஜிட்டல் அரஸ்ட், ஆன்லைன் டிரேடிங் என வரும் அழைப்புகளை பொதுமக்கள் யாரும் நம்பி பணம் அனுப்ப வேண்டாம், அது முழுவதும் பொய்யான அழைப்பு எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இதேபோல் வீட்டிலேயே வேலை என்ற பெயரில் சமூக வலைதளத்தில் வரும் லிங்கை பயன்படுத்தக்கூடாது. பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். வெளிநாட்டில் வேலைவாய்ப்பு, உங்களுக்கு பரிசு பொருட்கள் வந்துள்ளது என்பது போன்ற அழைப்புகள் சைபர் க்ரைம் ஆக இருக்கலாம். எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சைபர் க்ரைம் போலீஸார் தெரிவித்துள்ளனர்.





















