கரணம் தப்பினால் மரணம் - மயிலாடுதுறையில் மாணவர்கள் அந்தரத்தில் பயணிக்கும் கொடுமை
வேட்டையம்பாடியில் பழுதடைந்து மீட்கவும் ஆபத்தான நிலையில் உள்ள தெற்குராஜன் வாய்க்கால் பாலத்தை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட வேட்டையாம்பாடி கிராமத்தில் சுமார் 200 -க்கு மேற்பட்ட ஏழை எளிய விவசாய கூலி தொழிலாளர்களின் குடும்பங்கள் வசித்து வருகிறனர். இந்த மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு ஊரை விட்டு வெளியில் செல்ல வேண்டும் என்றால் தெற்குராஜன் வாய்க்காலை கடந்துதான் செல்லவேண்டும். இந்த வாய்க்கால்களை கடக்க வேண்டும் என்றால் சட்ரஸ் எனப்படும் நீர்ஒழுகி பாலம்தான் இவர்களுக்கு ஒரே வழி. இந்த பாலமும் கட்டப்பட்டு சுமார் 50 ஆண்டுகள் கடந்ததால் சட்ரஸ் எனப்படும், நீர்ஒழுகி பாலம் தற்போது உடைந்து சிதலமடைந்து ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் காணப்படுகிறது.
இந்த சட்ரஸ் பாலம் மயிலாடுதுறை தாலுக்காவையும், சீர்காழி தாலுக்காவையும் இணைக்கு வகையில் அமைந்துள்ளது. இதனால் வேட்டையம்பாடி கிராமத்தை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் என அனைவரும் மணல்மேடு , சீர்காழி, கொண்டல் என பல்வேறு ஊர்களுக்கு கல்வி பயில்வதற்கு இந்த உடைந்த ஆபத்தை விளைவிக்கும் பாலத்தை கடந்து சென்று வருகின்றனர். அதுமட்டுமின்றி வேட்டையாம்பட்டி கிராமத்தைச் சுற்றி 200 ஏக்கருக்கு மேல் விளை நிலங்களும் அதனை நம்பி விவசாய தொழிலும் நடைபெற்றது வருகின்றது. விவசாயத் தொழிலுக்கு தேவையான இடுபொருள்கள் மற்றும் நெல் கொள்முதல் நிலையங்களுக்கு செல்ல வேண்டும் என்றாலும், இந்த பாலத்தை தான் கடந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது.
இந்நிலையில் வேட்டையம்பாடி கிராமத்தில் சட்ரஸ் மதவுடன் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு தெற்குராஜன்வாய்க்காலில் கட்டப்பட்ட இந்த பாலம் தற்போது முற்றிலும் வலுவிழந்து, இடிந்து விழுத் தொடங்கியுள்ளது. இந்த பாலம் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு ஒரு பகுதியில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டு உடைந்ததால் கார் போன்ற வாகனங்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் அவசர தேவைக்கு உயிர்காக்கும் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் என எதுவும் வர முடியாத நிலை உள்ளது. மேலும், அந்த பகுதியில் போதிய மின்விளக்கு வசதிகள் இல்லாததால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் தடுமாறி விழும் அபாயம் இருந்து வருகிறது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இத்தகைய பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த பாலம் குறித்து பலமுறை அரசு அலுவலர்களிடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என்றும், வேட்டையம்பாடி கிராமத்தில் இருந்து சீர்காழி, கொண்டல், மணல்மேடு, குறிச்சி, மயிலாடுதுறை ஆகிய பகுதிகளுக்கு செல்வதற்கும், பள்ளி, கல்லூரி மாணவர்கள், விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் இந்த தெற்குராஜன்வாய்க்கால் பாலம்வழியாகத்தான் செல்ல வேண்டும், கொள்ளிடம் ஆற்றில் மணல் ஏற்றிசெல்லும் வாகனங்கள் இந்த வழிதடத்தில் வந்து சாலையை சேதப்படுத்திவிடுகின்றனர். பழுதடைந்த பாலத்தில் மின்விளக்கு வசதி இல்லாததால் இரவு நேரங்கள் பலர் தடுமாறி விழுந்து விபத்து ஏற்படும் சம்பவங்களும் நடந்து வருகிறது.
தற்போதுவரை வாய்க்காலில் தண்ணீர்வரவில்லை. இன்னும் ஒரு சில மாதங்களில் மழைகாலம் தொடங்குவதோடு தெற்குராஜன்வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிட்டால் சிதிலமடைந்த பாலத்தை கடக்கும் போது தடுமாறி யாரேனும் விழுந்தால் ஆற்றுநீரில் சிக்கி பெரும் அசம்பாவிதங்கள் ஏற்படும் என்றும் ஆகையால் இந்த பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் கட்டி தர வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கைவிடுத்தோம். சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் வரும் நிதியாண்டில் இந்த பாலத்தை சீரமைக்க முயற்சி செய்வதாக கூறுகின்றனர். இதுபோன்று பல அதிகாரிகள் கூறுவதாகவும், அதற்குள் அந்த அதிகாரி இடமாறுதலில் சென்று விடுவதால் அப்படியே கிடப்பில் போட்டுவிடுகின்றனர் என வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும் மழைகாலத்திற்குள்ளாக இந்த பாலத்தை இடித்து புதிய பாலத்தை கட்டித்தர வேண்டும். தடுப்புகள் அமைத்து பெரிய அளவில் விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து நடவடிக்கை இல்லை என்றால் விரைவில் மிகப் பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்ட உள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்தனர்