(Source: ECI/ABP News/ABP Majha)
பழங்காவிரியில் கொட்டப்பட்ட கழிவுகள் - அபராதம் விதித்து எச்சரிக்கை கொடுத்த மயிலாடுதுறை நகராட்சி
நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மயிலாடுதுறையில் நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறையில் பழங்காவிரி வாய்க்காலில் கொட்டப்பட்ட கழிவுகளால் மலைபோல் குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்திய திருமண மண்டபம் உள்ளிட்ட வணிக நிறுவனங்களுக்கு நகராட்சி நிர்வாகம் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். பொதுவாக மக்கள் குப்பைகளை எப்போதும் அலட்சியமாகவே கையாளுகின்றனர். வீடுகளில் உள்ள குப்பைகளை கூட முறையாக பிரித்து அதற்குறிய முறையில் தூய்மை பணியாளர்களிடம் வழங்குவது இல்லை. இதிலும் பலர் குப்பைகளை சகட்டு மேனிக்கு பொது வெளியிலும், வீதிகளிலும் வீசி செல்கின்றனர். மேலும் பல திருமண மண்டபங்கள், தொழிற்சாலைகள் என பல்வேறு நிறுவனங்களிலும் அங்கு தேங்கும் குப்பைகளை அருகில் உள்ள ஆறுகள், வாய்க்கால்கள், குளங்கள் என நீர் நிலைகளின் நன்மை தெரியாமல் கொட்டி வருகின்றனர்.
இதனை தடுக்க அரசு மக்களுக்கு பல்வேறு அறிவுரைகளையும், திரைப்படம், விளையாட்டு துறை உள்ளிட்ட பிரபலங்களை வைத்து விழிப்புணர்வு செய்தும், அபராதம் விதித்தாலும் அதற்கு பலன் என்பது இல்லாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட மகாதான தெருவில் பிரபல திருமண மஹால் மற்றும் சூப்பர் மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் கழிவுகள் பின்புறம் உள்ள செட்டி தெருவில் ஓடும் பழங்காவிரி வாய்க்காலில் கொட்டப்பட்டு வந்துள்ளது. இதனால் வாய்க்காலில் மலை போல் குப்பைகள் தேங்கி, நீர் நிலைகள் பாதிப்படைவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்திருந்தனர்.
இந்த புகாரை அடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு நேரில் பார்வையிட்டனர். அப்போது பழங்காவிரி வாய்க்காலில் குப்பைகள் கொட்டி வாய்க்கால் முழுவதும் சுகாதார சீர் கேட்டுடன் காணப்பட்டதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து குப்பைகளை பழங்காவிரி வாய்க்காலில் கொட்டிய திருமண மண்டபத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் மற்றும் வணிக கடைக்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதத்தை அதிகாரிகள் விதித்தனர். மேலும் பொது வெளியில் குப்பைகள் கொட்டப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் பலர் கூறுகையில், ”அதிகாரிகள் புகார் வரும்போது அதனை ஆய்வு செய்து நடவடிக்கைகள் எடுப்பது போன்று வரும் காலங்களில் அவர்களாகவே சுழற்சி முறையில் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து இது போன்று நீர்நிலைகளை குப்பைகளை கட்டுபவர்கள் மீது கடுமையான தண்டனை வழங்கவேண்டும், மேலும் மயிலாடுதுறை நகராட்சியில் பல பகுதிகளில் இது போன்று நீர்நிலைகளில் குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளது. அதனையும் மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகம் ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
NEET UG 2024 Syllabus : நீட் 2024 தேர்வுக்கான திருத்தப்பட்ட பாடத்திட்டம் இதுதான் : வெளியிட்ட என்டிஏ