‛பிக்பாஸ்’ ஒளிபரப்ப தடை விதிங்க... காவல் நிலையத்தில் பாஜக புகார் மனு!
Big Boss: கலாச்சாரத்தை சீரழிக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியை நிறுத்த வலியுறுத்தி, மயிலாடுதுறை பாஜக கட்சியினர் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பான நாள் முதல் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. நான்கு சீசன்களை வெற்றிகரமாக நடந்து முடிந்த இந்நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் எப்போது ஒளிபரப்பு என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் அக்டோபர் மாதத்தில் சீசன் 5 ஆரம்பம் என சொல்லப்படும் வேளையில் விரைவில் பிக்பாஸ் சீசன் என விளம்பரங்கள் வெளியாகி வருகின்றன. சமீபத்தில் இதற்கான இந்த நிகழ்ச்சிக்கான புரொமோஷன் ஷூட்டில் கமல் பங்கேற்ற போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகின. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் தற்போது நடித்து வரும் விக்ரம் படத்திற்கு ஆரம்பத்தில் ஒரு டீசர் வெளியிட்டனர். அதில் ஆரம்பிக்கலாங்களா என கமல் கேட்பார். அதே பாணியில் இந்த பிக்பாஸ் சீசனுக்கான 5 டீசரை வெளியிட்டுள்ளனர். அதோடு பிக்பாஸ் 5க்கான லோகோவும் மாற்றப்பட்டுள்ளது. கமலின் பிக்பாஸ் 5 தொடர்பான இந்த டீசர் வைரலாகின. கடந்த ஆண்டு சீசன் அக்டோபர் மாதம் 4ம் தேதி ஆரம்பமாகி ஜனவரி 17ம் தேதி வரை நடந்தது. அது போலவே இந்த ஆண்டும் சீசனும் அக்டோபர் மாதம் தான் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.
இந்த சூழலில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடுத்து நிறுத்த வலியுறுத்தி மயிலாடுதுறை காவல்நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மயிலாடுதுறை நகர தலைவர் மோடி கண்ணன் புகார் மனு அளித்தார். மயிலாடுதுறை காவல் நிலைய ஆய்வாளர் செல்வத்திடம் அளித்த புகார் மனுவில் அவர் கூறியதாவது: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி இந்து கலாச்சாரத்துக்கு எதிராகவும், நிகழ்ச்சி பங்கேற்பாளர்களை அதிக மன உளைச்சலுக்கு உள்ளாக்குவதாகவும், பங்கேற்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாததாகவும் உள்ளது.
கொரோனா மூன்றாவது அலை தீவிரமாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையிலும், கொரோனா காரணமாக கோயில்களை திறக்கவும், விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்தவும் அனுமதி மறுக்கப்பட்டுவரும் நிலையிலும், பிக் பாஸ் நிகழ்ச்சி தேவையற்றது. இதில், நிகழ்ச்சி தயாரிப்புக்காக 500 க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடுகின்றனர். எனவே, கொரோனா காலத்தில் கலாச்சார சீரழிவுக்கு வழிவகுக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அப்போது, பாஜக மாவட்ட, நகர நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சி பிரமுகர்களான காயத்ரி ரகுராம், நமிதா உள்ளிட்டோர் நிகழ்ச்சிக்கு ஆதரவாக இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.