சீர்காழியில் ஆட்சியர் வருகையை அடுத்து அப்புறப்படுத்தப்பட்ட மழைநீர்!
மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் வருவதை அறிந்து அதன் பின்னர் தேங்கிய மழைநீரை வடிய நடவடிக்கை எடுத்த சீர்காழி நகராட்சி நிர்வாகத்தினர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு சற்று காலதாமதம் அக்டோபர் 29ம் தேதி தொடங்கியது. இருந்த போதும் அன்று முதல் தொடர்ச்சியாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை ஆழ்ந்த காற்றமுக்த தாழ்வு பகுதியாக தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வட இலங்கை பகுதிகளில் நிலவுகிறது.
இதுஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழக, புதுவை கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், மயிலாடுதுறை, விழுப்புரம், திருவாரூர், நீலகிரி, வேலூர், அரியலூர், சேலம், கரூர், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதால் வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு தொடங்கிய மழையானது மயிலாடுதுறை மாவட்டத்தில் 24 மணி நேரத்தையும் கடந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் தண்ணீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளை இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா நேரில் சென்று ஆய்வு செய்து தண்ணீர் வடிவதற்கான பணிகளை துரிதப்படுத்தினார். இந்த சூழலில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்கி உள்ளது. குறிப்பாக சீர்காழி நகர் பகுதியில் பொதுமக்கள் அதிகம் நடமாட கூடிய பழைய பேருந்து நிலையம் ஸ்டேட் பாங்க் வங்கி எதிரே தொடர் மழையால் குளம் போன்று தண்ணீர் தேங்கி நின்றது. இதன் அருகே நகராட்சி அலுவலகம் இருந்தும் தண்ணீர் வடிவதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் மாலை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் சீர்காழி பகுதிக்கு ஆய்வுக்கு வருவதாக தகவல்கள் வெளியாகின. அந்த தகவலை அடுத்து ஆட்சியர் வருவதற்குள் அவசரக் கதியில் காலையிலிருந்து தேங்கி இருந்த தண்ணீரை நகராட்சி நிர்வாகம் உடனடியாக அப்புறப்படுத்தி நடவடிக்கை எடுத்தது. இதனைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் காலையிலிருந்து தேங்கி இருந்த தண்ணீரில் மிகுந்த சிரமத்தை சந்தித்ததாகவும், ஆட்சியர் வருவதை அறிந்து தண்ணீரை அப்புறப்படுத்த முடிந்த நகராட்சி நிர்வாகம் இதை முன்னதாக செய்யாதது ஏன் எனவும் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து ஆய்வுக்கு வந்த ஆட்சியர் தண்ணீர் இல்லாத சாலையை ஆய்வு செய்துவிட்டு இதுபோன்று சீர்காழி நகருக்குள் தண்ணீர் தேங்காத வண்ணம் பார்த்துக் கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி சென்றார்.