தஞ்சை பெரிய கோயிலில் விடிய விடிய நடந்த சிவராத்திரி பூஜை! பக்தியில் திளைத்த பக்தர்கள்!
மகா சிவராத்திரி மற்றும் பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயில் காலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.
தஞ்சாவூர்: மகா சிவராத்திரி மற்றும் பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயில் காலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.
உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலை மாமன்னன் இராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவில் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. இத்தகைய சிறப்பு பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் சிவராத்திரி விழா வெகு விமர்சையாக நடைபெறும்.
அதன்படி உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் காலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றது. தஞ்சை மட்டும் அல்லாது பல்வேறு மாநிலம், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். பெருவுடையாருக்கு விபூதி, பால், சந்தனம், தயிர், எலுமிச்சை சாறு, மஞ்சள் ,அரிசி மாவு , பொடி திரவிய பொடி உள்ளிட்ட அபிஷேக பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
மகா சிவராத்திரி நாளில் பிரதோஷமும் இணைந்து வந்ததால் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இன்று மாலை நடந்த பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், திரவியப்பொடி, விபூதி உள்ளிட்ட மங்கள பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தீபாரதனை காட்டப்பட்டது. இதில், ஏராளாமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து, இரவு மகா சிவராத்திரியை முன்னிட்டு, பெருவுடையார், பெருயநாயகி அம்மனுக்கு நான்கு கால பூஜை, அதிகாலை அர்த்தஜாம பூஜைகள் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். பெரிய கோயிலுக்கு வந்த பக்தர்களின் எண்ணிக்கை அதிகம் இருந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது. பெரிய வாகனங்கள் பெரிய கோயில் வழியாக செல்லாமல் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது.
அதே போல் தமிழக அரசு சார்பில், தஞ்சாவூர் பெரிய கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு கோயில் அருகே உள்ள பெத்தண்ணன் கலையரங்கத்தில் 500-க்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்கள் பரதநாட்டியம், தமிழர்களின் இசை நிகழ்ச்சிகளும், பட்டிமன்றம், இன்னிசை நிகழ்ச்சிகளும் விடிய விடிய நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.