கும்பாபிஷேக பணிகள்... புதிதாக கட்டப்பட்ட சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 3 பேர் காயம்
சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் இருந்து தரமற்ற முறையில் பணிகள் நடந்துள்ளது என்பது உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரம் அருகே கோபிநாத பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகத்திற்காக திருப்பணிகள் நடந்து வருகிறது. இதில் புதிதாக கட்டப்பட்ட சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து குழந்தை உட்பட 3 பேர் காயமடைந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் பகுதியில் கோபிநாத பெருமாள் கோயில் உள்ளது. பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இந்த கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. இதனால் கடந்த ஆண்டு பாலாலயம் செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது.
கோயிலில் பல்வேறு கட்டமாக திருப்பணிகள் நடந்து வரும் நிலையில் கோயிலுக்கு சுமார் 6 அடி மேல் உயரத்திற்கு 3 அடுக்காக சுமார் 2 அடி அகலத்தில் சுற்றுசுவர் கட்டும் பணி கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. சுமார் 2 அடி அகலத்தில கட்டப்படும் இந்த சுவர் இரண்டு பக்கம் செங்கல்களாலும் நடுப்பகுதியில் சிமெண்டு கலவையை நிரப்பியும் கட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று திடீரென இந்த சுற்றுச்சுவரின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. இதனால் சுற்றுச்சுவரின் அருகே நின்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த தமிழ்மணி (65), தனது மனைவி தாமரை செல்வி (50), ஆகியோர் மீது சரிந்து விழுந்தது. இதில் தமிழ்மணி, தாமரைசெல்வி ஆகியோருக்கு காலில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பேரன் ஆனந்தகுகன்(3) தலையில் லேசான காயம் ஏற்பட்டது.
உடன் அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டு பட்டீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை முடிந்த பின்னர் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்த நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து பட்டீஸ்வரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், கோபிநாத சுவாமி கோயிலில் சுற்றுச்சுவர் தரமற்ற முறையில் கட்டப்பட்டு வருகிறது. இதுகுறித்து தொடர்ந்து பலமுறை தெரிவித்து வந்தோம். கட்டுமானப்பணிகளில் கவனம் செலுத்தும்படி கோரிக்கையும் விடுத்து வந்தோம், ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது இந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் இருந்து தரமற்ற முறையில் பணிகள் நடந்துள்ளது என்பது உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இருப்பினும் இந்த விபத்தில் குழந்தை உட்பட 3 பேர் காயமடைந்துள்ளனர். இனியும் காலம் தாழ்த்தாமல் இந்த பணிகளை உரிய முறையில் ஆய்வு செய்து தரமானதாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.





















