தஞ்சாவூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில மாநாடு அழைப்பிதழ் வெளியீடு
இரண்டாம் நாள் டிச.5-ம் தேதி தமிழரசி திருமண மண்டபத்தில் மாநாடு தொடக்க விழா நடைபெறுகிறது. தொடக்க விழாவுக்கு சங்க மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமை வகிக்கிறார்,

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில மாநாடு வரும் டிச.4ம் தொடங்கி நான்கு நாட்கள் நடைபெறுகிறது. முதல்நாள் கலைப் பேரணியும், தொடர்ந்து கருத்தரங்குகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது என்று சங்க பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா தெரிவித்தார்.
தஞ்சாவூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநாடு அழைப்பிதழ் வெளியிட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் நிருபர்களிடம் சங்க பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா கூறியதாவது: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க 16- வது மாநில மாநாடு "வெறுப்பின் கொற்றம் வீழ்க, அன்பே அறமென எழுக" என்ற முழக்கத்தோடு தஞ்சாவூரில் நான்கு நாட்கள் நடைபெறவுள்ளது.
முதல்நாள் கலைப்பேரணி நடைபெறுகிறது. பேரணியை சதிராட்ட கலைஞர் ரா.முத்துக்கண்ணம்மாள் தொடங்கி வைக்கவுள்ளார். அன்று மாலை திலகர் திடலில் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், முன்னாள் மத்திய நிதித்துறை இணையமைச்சர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ரோகிணி, திரைப்பட இயக்குநர் ராஜூமுருகன், கவிஞர் சினேகன் உள்ளிட்டோர் கருத்துரை வழங்க உள்ளனர். தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.
இரண்டாம் நாள் டிச.5-ம் தேதி தமிழரசி திருமண மண்டபத்தில் மாநாடு தொடக்க விழா நடைபெறுகிறது. தொடக்க விழாவுக்கு சங்க மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமை வகிக்கிறார், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி வரவேற்புரையாற்றுகிறார். இதில் 700க்கும் மேற்பட்ட சங்கத்தின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.
பின்னர் மாலை நடைபெறும் நிகழ்வில் "வெறுப்பின் கொற்றம் வீழ்க" என்ற தலைப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ச.சசிகாந்த் செந்தில், ஊடகவியலாளர் என்.ராம், பேராசியர் அருணன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க துணைத் தலைவர் உ.வாசுகி ஆகியோர் கருத்துரை வழங்குகின்றனர்.
தொடர்ந்து 6-ம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள், பாபர் மசூதி தகர்ப்பு நாள் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கி.சந்துரு கருத்துரை வழங்கவுள்ளார். தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக நாடாளுமன்றக்குழுத் தலைவருமான கனிமொழி சிறப்புரையாற்றுகிறார். மாலை 4.30 மணிக்கு நூல்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள் வெளியிடப்படவுள்ளது. பின்னர் மாலை 6 மணிக்கு "ஆகமத்தின் பெயரால் அநீதி" என்ற தலைப்பில் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி து.அரிபரந்தாமன் கருத்துரை வழங்க உள்ளார்.
டிச.7-ம் தேதி "அரசியல் சாசனத்தின் முகவுரை" என்ற தலைப்பில் ஒடிசா உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.முரளிதர் கருத்துரை வழங்க உள்ளார். இந்த நான்கு நாட்கள் நிகழ்விலும் பலர் உரையாற்றவுள்ளனர். இதில் எழுத்தாளர்கள், கவிஞர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர். தினமும் இன்றைய அரசியல், சமுதாயம், கருத்துரிமை தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. மாநாட்டில் செம்மொழி வரலாற்று கண்காட்சி, இந்தி திணிப்பு எதிர்ப்பு கண்காட்சி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்கங்கள் அமைக்கப்படவுள்ளது. முதல்நாள் கலைப்பேரணி மற்றும் நிகழ்ச்சிகள் மக்களுக்காக நடத்தப்படுகிறது. பின்னர் மண்டபத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பொதுமக்களும் பங்கேற்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பேட்டியின் போது சங்கத்தின் மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம், முன்னாள் மாநிலத் தலைவர் ச.தமிழ்செல்வன், மாநாட்டின் வரவேற்புக்குழு செயலாளர் களப்பிரன், வரவேற்பு குழு பொருளாளர் ப.சத்தியநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.




















