பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த கோரி வரும் 24இல் மனித சங்கிலி போராட்டம் - ஜாக்டோ – ஜியோ அறிவிப்பு
மத்திய அரசு வழங்கியுள்ளவாறு 01.07.2022 முதல் 4% அகவிலைப்படியினை முன் தேதியிட்டு நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும்.
தஞ்சாவூர்: பழைய பென்சன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 24ம் தேதி மாநிலம் தழுவிய மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட உள்ளதாக ஜாக்டோ -ஜியோ அறிவித்துள்ளது.
முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பினை உடனடியாக வழங்கிட வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத கால பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும். அரசுத்துறையில் உள்ள அனைத்து காலிப் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும்.
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசு வழங்கியுள்ளவாறு 01.07.2022 முதல் 4% அகவிலைப்படியினை முன் தேதியிட்டு நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும்.
தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் மற்றும் தினக்கூலி முறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள். ஊர்ப்புற நூலகர்கள், MRB செவிலியர்கள் உள்ளிட்டவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
முதல்வர் பங்கேற்ற வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் முதல்வரிடம் ஜாக்டோ-ஜியோ சார்பில் வழங்கப்பட்ட ஆசிரியர், அரசு ஊழியர், அரசுப்பணியாளர் மற்றும் துறைவாரி, பிரிவுவாரி ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும். என்பன உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தஞ்சை பனகல் கட்டடம் முன்பு உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
உண்ணாவிரதத்தில் நிறைவுரை ஆற்ற வந்த மாநில ஒருங்கிணைப்பாளர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் வருகிற பட்ஜெட் கூட்டத் தொடரில் இந்த அறிவிப்புகளை வெளியிட வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 24ம் தேதி மாநிலம் முழுவதும் மனிதசங்கிலி போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்தார்.
இந்தியாவில் இப்போது மத்திய அரசு ஊழியர்களுக்கும் பெரும்பாலான மாநில அரசு ஊழியர்களுக்கும் புதிய ஓய்வூதிய முறையே பின்பற்றப்படுகிறது. இருப்பினும் பழைய ஓய்வூதிய முறை வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் பல மாநிலங்களில் இந்த ஓய்வூதிய முறை பின்பற்றப்படும். இப்போது கூட சில மாநிலங்கள் மீண்டும் புதிய ஓய்வூதிய முறையில் இருந்து பழைய ஓய்வூதிய முறைக்குத் திரும்ப முயன்று வருகின்றனர்.
மத்திய அரசே பழைய ஓய்வூதிய முறை நிதிநிலையை ஆபத்தில் தள்ளும் என எச்சரித்து வருகிறது. பிரதமர் மோடியும் அண்டை நாடுகளில் நிலவும் நிதி நெருக்கடியைக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, பழைய ஓய்வூதியத் திட்டத்திற்குத் திரும்பும் மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டங்களைக் கொண்டு வந்தால் நம் குழந்தைகளின் எதிர்காலமே முற்றிலுமாக பாழாகிவிடும் என்றும் அவர் குறிப்பிட்டார். இருப்பினும், பல தொழிலாளர் அமைப்பு பழைய ஓய்வூதிய முறையே வலியுறுத்தி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.