தஞ்சையில் சுகாதார ஆய்வாளர்கள் போராட்டம் - சென்னையில் கைதான சுகாதார ஆய்வாளர்களை விடுவிக்க கோரிக்கை
’’தமிழகத்தில் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப கோரிக்கை’’
காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட இளம் சுகாதார ஆய்வாளர்களை கைது செய்ததை கண்டித்தும், அவர்களை உடனடியாக விடுவிக்க கோரி தஞ்சாவூர் மாவட்டத்தில் சுகாதார ஆய்வாளர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாவட்டத்தில் பொது சுகாதாரம் தொடர்பான அனைத்து பணிகளும் பாதிக்கப்பட்டது தமிழகம் முழுவதும் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், தற்காலிக பணியாளர்கள் நிரந்தர பணியாளர்களாக நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 29ஆம் தேதி முன்தினம் சென்னையில் 1,646 சுகாதார ஆய்வாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை போலீஸார் பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல், கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனை கண்டிக்கும் விதமாக மாநிலம் முழுவதும் சுகாதார ஆய்வாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார ஆய்வாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் அலுவலக வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு, பொது சுகாதாரத்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை வகித்தார். சுகாதார ஆய்வாளர் சங்கங்களின் மாவட்ட செயலாளர் சுதாகர், கூட்டமைப்பின் செயலாளர் மு.சிங்காரவேல், மருந்தாளுநர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பாஸ்கரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தில் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். இதற்காக போராடியவர்களை கைது செய்ததை கண்டித்தும், அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். தஞ்சாவூர் மாவட்டத்தில் 168 சுகாதார ஆய்வாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் அனைவரும் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து, பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால், மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி, கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி, மருத்துவமனைகளில் பிரேத பரிசோதனைக்கான சான்றுதழ் வழங்கும் பணி உள்ளிட்ட பொது சுகாதாரப்பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டது.
இது குறித்து போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறுகையில், சுகாதார ஆய்வாளர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று போன்ற கொடூரமாக நோய்களிலிருந்து மக்களை காப்பாற்றும் பணியில் தங்களது உயிரை கூட கவலைப்படாமலும், குடும்பத்தாரை பற்றியும் எந்த அக்கறை இல்லாமல் பணியாற்றி வருகின்றனர். இதே போல் தமிழகத்தில் எந்த விதமான நோய்கள் உருவானாலும் சுகாதார ஆய்வாளர்களின் பங்கு அதிகளவில் உள்ளது. தமிழகத்தில் காலிப்பணியிடங்கள் அதிகளவில் இருப்பதால் வேலைப்பளுகாரணமாக சுகாதார ஆய்வாளர்கள் மன உளைச்சலில் ஆளாகி வருகின்றனர்.
இது குறித்து பல முறை தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தும் பலனில்லாமல் இருந்து வருகிறது. இதனையடுத்து, காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறத்தி ஆர்ப்பாட்டத்தில் சென்ற 1646 பேரை தமிழக அரசு கைது செய்துள்ளது. அவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும். தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விடுப்பு எடுத்து கலந்து கொண்டுள்ளோம். இதனால் சுகாதாரப்பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு கைது செய்யப்பட்ட 1646 பேரை உடனடியாக விடுதலை செய்யா விட்டால், மாநில சங்கத்தின் ஆலோசனை படி போராட்டம் தொடரும். அப்போது தமிழகம் முழுவதும் சுகாதாரப்பணிகள் ஸதம்பிக்கும் என்றார்.