ரேஷன் அரிசி கடத்தலில் கருப்பு ஆடுகளை பிடிக்க நடவடிக்கை: உணவுத்துறை செயலாளர் திட்டவட்டம்
ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக பெரும்புள்ளிகள் மற்றும் ரேஷன் கடைகள், குடோன்களில் உள்ள கருப்பு ஆடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக பெரும்புள்ளிகள் மற்றும் ரேஷன் கடைகள், குடோன்களில் உள்ள கருப்பு ஆடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
தஞ்சாவூரில் ரேஷன் கடைகள், நெல் சேமிப்பு குடோன்களை ஆகியவற்றை உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது;
75 ஆண்டுகள் கடந்தாலும் தரையில் மூங்கில் குச்சி போட்டு, தார்ப்பாய் கொண்டு நெல் மூட்டைகளை மூடி வைக்கும் நிலைமை இன்னும் உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், டெல்டா மாவட்டங்களில் 20 இடங்களில் 2.86 லட்சம் மெட்ரிக் டன் சேமிக்கும் வகையில் செமி குடோன்கள் கட்டப்பட்டு வருகிறது. வரும் அக்டோபர் இறுதிக்குள்ளாக இந்த பணிகள் முடிக்கப்பட உள்ளது.
மத்திய அரசின் சேமிப்பு குடோன்களில் நெல் மூட்டைகளை அடுக்கி வைப்பதற்கும் அனுமதி கேட்டுள்ளோம். அதன்படி திருச்சியில் 35 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிற்கு நெல் வைப்பதற்கான காலி இடம் உள்ளது. அதை தமிழக அரசுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு ரேஷன் அரிசி கடத்தலைப் பிடித்து வருகிறோம், கடந்த 10 நாட்களில், 99 மெட்ரிக் டன் ரேஷன் அரிசி, 3.5 மெட்ரி டன் கோதுமையைத் தனியார் மில்லில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து டிரைவர், பணியாளர்கள் இல்லாமல் இதில் சம்பந்தப்பட்ட முக்கிய புள்ளிகளையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். மேலும், இரண்டு தனியார் மில்லில் ஆய்வு செய்து மொத்தமாக 120 மெட்ரிக் டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தனி நபர்கள் இறந்தவர்கள் என சுமார் 2.45 லட்சம் பேரும், கூட்டுக் குடும்ப அட்டையில் இறந்தவர் நபர்கள் என 14.26 லட்சம் பேரும் ரேஷன் கார்டுகளில் இருந்து நீக்கும் பணிகள் நடந்து வருகிறது.
ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க 4 எஸ்.பி., 12 டி.எஸ்.பி.,க்கள் 24 இன்ஸ்பெக்டர்கள், 87 சப்– இன்ஸ்பெக்டர்கள் என பணியில் உள்ளனர். அதை சமயம் அரிசியை வாங்கி தனியார் வியாபாரியிடம் விற்பனை செய்யாமல் பொதுமக்களுக்கும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பதைக் கடந்த இரண்டு மாதங்களாக தீவிரமாக கண்காணித்து வருகிறோம். இது தொடர்பான பெரும்புள்ளிகளையும், ரேஷன் கடைகள், குடோன்களில் உள்ள கருப்பு ஆடுகளையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வியாபாரிகள் வருவதைத் தடுக்க, ஒன்றிய அளவில் கண்காணிப்புக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது இவ்வாறு அவர் தெரிவித்தார்.