மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழி
மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழி மாணவர்கள் ஏற்றனர்.
தமிழகத்தில் போதை பொருளை ஒழிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. போதை பொருள் விற்பனை செய்யும் குற்றவாளிகளின் சொத்துக்களை முடக்கவும், அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யவும் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். தொடர் சோதனையில் ஈடுபட்டு கிலோ கணக்கில் கஞ்சாவை பறிமுதல் செய்து கைது செய்து வருகின்றனர். இதே போன்று கடைகளில் ஆய்வு செய்து குட்கா உள்பட போதை பொருட்களை பிடித்து வருகின்றனர்.
இந்தநிலையில் பள்ளி, கல்லூரி அருகில் உள்ள பகுதிகளில், சட்ட விரோத போதை பொருள் விற்பனை அதிகரித்துள்ளதால், தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் நினைத்து பெற்றோர் அச்சம் அடைந்துள்ளனர். எனவே இளம் தலைமுறையினர் போதை பழக்கத்தில் சிக்காமல் இருக்கவும், சிக்கியவர்களை அந்த பழக்கங்களில் இருந்து மீட்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில், போதைபொருள் பயன்பாடு மற்றும் விற்பனை ஒழிப்பு உறுதிமொழி எடுக்க பள்ளி கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தினர். மேலும் 19ம் தேதி வரை போதைப்பொருள் விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, கலைவாணர் அரங்கில், நேற்று காலை நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் என்.ஐ.பி குற்றப்புலனாய்வு அலகை, மதுவிலக்கு அமலாக்கத் துறையுடன் இணைத்து, அமலாக்கத் துறை உருவாக்குவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். அதனை தொடர்ந்து போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு குறும்ப டத்தை வெளியிட்டு, நாட்டு நலப்பணி, தேசிய மாணவர் படையினர் பங்கேற்கும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார். மாணவர்களுடன் சேர்ந்து போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டார்.
அதன் ஒன்றாக மயிலாடுதுறை செயின் பால்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஆயிரக்கணக்கான மாணவிகள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமையில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதி மொழியை ஏற்றுக் கொண்டனர். போதை பழக்கம் குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு அடைந்தால் வருங்கால சந்ததியினர் போதைப் பழக்கத்திற்கு அடிமையாக மாட்டார்கள் என்பதால் மாணவர்கள் மத்தியில் உறுதிமொழி எடுக்கப்பட்டது என மாவட்ட ஆட்சியர் லலிதா தெரிவித்தார்.
அதேபோன்று மயிலாடுதுறையில் உள்ள சில்வர் ஜூப்லி தனியார் பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. காவல்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா கலந்து கொண்டு தலைமை தாங்கினார். பின்னர் போதை பொருள் ஒழிப்பு குறித்து அறிவுரைகளை பள்ளி மாணவ, மாணவிகள் வழங்கினார். இதில், 'போதை பயன்பாட்டால் எதிர்கால சமுதாயம் சீரழியும்; போதைப் பொருட்கள் பயன்பாட்டை தடுப்போம், இளைஞர்களின் எதிர்கால நலனுக்கான போதைப்பொருள் பயன்படுத்துவோர் குறித்து போலீசாரிடம் முறையிடுவோம்,' என, அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியின் இறுதியில் போதை பொருள் ஒழிப்பு குறித்தி விழிப்புணர்வு காணொலி திரையிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்