‘நடுக்கம் தீர்த்த பெருமான்’ தலம் எங்கிருக்கிறது என்று தெரியுங்களா?
சுமார் 900 ஆண்டுகளுக்கு முன் இச்சம்பவம் நடந்த திருத்தலம் கும்பகோணத்துக்கு அருகில் உள்ள திருபுவனம்தான். இதை பற்றி தெரிந்து கொள்வோமா.

தஞ்சாவூர்: நம் தமிழகத்தில் ஒவ்வொரு கோயிலிலும் அருள்பாலிக்கும் கடவுளின் பெயருக்கு பின்னால் ஏதாவது ஒரு இதிகாச காரணம் அமைந்திருக்கும். அதுபோல்தான் மன்னர் ஒருவர் தான் இழந்த நாடு, ஆட்சி, செல்வம், புகழ், மனை, மக்கள் அனைத்தையும் ஒரு திருத்தலம் மீண்டும் வழங்கியிருக்கிறது. அவரது நடுக்கத்தை நீக்கியிருக்கிறது என்பது வரலாற்று உண்மை.
சுமார் 900 ஆண்டுகளுக்கு முன் இச்சம்பவம் நடந்த திருத்தலம் கும்பகோணத்துக்கு அருகில் உள்ள திருபுவனம்தான். இதை பற்றி தெரிந்து கொள்வோமா. பட்டு என்றால் பட்டென்றும், சட்டென்று பதில் வருவது திருபுவனம் என்றுதான். இத்தகைய பெயர் பெற்ற இத்தலம், பக்திக்கும் பெயர் பெற்றுள்ளது.
இத்தலத்தில் அமைந்துள்ள கம்பகரேசுவரர் கோயில் மூன்றாம் குலோத்துங்க சோழன் கட்டிய கோயிலாகும். இக்கோயில் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில், கங்கை கொண்ட சோழபுரம் கோயில், தாராசுரம் கோயில் ஆகிய கோயில்களின் அமைப்பை அப்படியே கொண்டுள்ளது.
வடநாட்டில் தான்பெற்ற வெற்றியின் மூலம் கொண்டு வந்த பொன், பொருள் போன்ற செல்வங்களை வைத்து குலோத்துங்க சோழனால் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பெற்று அதன் பிறகு வந்த மன்னர்களால் கட்டி முடிக்கப்பட்டது. சோழர்களால் கட்டப்பட்ட கடைசி கோயில் இதுதான் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இத்தகைய பெருமை வாய்ந்த திருபுவனம் கோயிலில் வீற்றிருக்கும் கம்பகரேசுவரர் மற்றும் சரபேஸ்வரர் ஆகிய இரு தெய்வங்களுக்கும் வெவ்வேறு புராணங்கள் இருக்கின்றன. இதில் ‘கம்பகரேசுவரர்’ என்றால் ‘நடுக்கம் தீர்த்த பெருமான்’ என்று பொருள். இந்தப் பெருமானுக்கு இப்பெயர் வந்ததன் பின்னணியில் ஒரு பழங்கால நிகழ்வு உள்ளது.
மதுரையை ஆண்ட வரகுண பாண்டியன் என்ற மன்னர், தான் மேற்கொண்ட ஒரு போரில் எதிரிகளை துவம்சம் செய்து குதிரையில் வேகமாக முன்னேறினார். அப்போது, தவிர்க்க முடியாத நிலையில் ஓர் அந்தணர் மேல் குதிரையை ஏற்றிக் கொன்றுவிட்டார். அவரை பிரம்மஹத்தி தோஷம் பிடித்துவிட்டது. இதனால் நிலை தடுமாறி, புத்தி கலங்கி ஓடித் திரிந்தார். அப்போது அவர் கண்ணில் திருவிடைமருதூர் கோயில் பட்டது. மன்னர் இக்கோயில் உள்ளே நுழைந்ததுமே அவரைப் பிடித்திருந்த பிரம்மஹத்தி விலகி நின்றது.
இதனால் வரகுண பாண்டியனுக்குச் சுய நினைவு வந்தது. இருந்தாலும் உடலில் ஏற்பட்ட நடுக்கம் நிற்கவில்லை. மீண்டும் வந்த வழியே திரும்பினால் பிரம்மஹத்தி பிடித்துக் கொள்ளுமோ என்ற பயத்தில் அவர் உடல் மேலும் அதிகமாக ஆடி நடுங்கியது.
இதையடுத்து கோயிலின் பின்வாசல் வழியே ஓடினார். திருவிடைமருதூர் கோயிலின் பின்வாசலும் திருபுவனம் கோயிலின் முன்வாசலும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன என்பது இங்கு குறிப்பிட வேண்டிய முக்கியான அம்சம். ஓடிவந்த பாண்டிய மன்னர், நேரே திருபுவனம் கோயிலுக்குள் நுழைந்தார். மூலவரின் சந்நிதிக்குள் நுழைந்த மன்னருக்கு, கம்பகரேசுவரை வணங்கியதும் நடுக்கம் நின்றது. உடலில் பழைய தெம்பும் வலுவும் மீண்டும் வந்தன.
சிவப்பெருமானை வணங்கியவர் அம்பாள் தர்மசம்வர்த்தினியையும் வணங்கினார். தான் ஒரு மன்னர் என்பதையே மறந்து நிலை குலைந்திருந்த மன்னருக்கு, அவர் ஓர் அரசன் என்பதை நினைவுப்படுத்தி, ஆட்சியை வாங்கிக் கொடுத்தது இந்த அம்பிகைதான். அதனால்தான் அறம் வளர்த்த நாயகி என்று அழைக்கப்படுகிறார்.
‘கம்பகம்’ என்றால் நடுக்கம். அதைப் போக்கி அருளியதால் இங்குள்ள இறைவன் கம்பகரேசுவரர் என்று அழைக்கப்படுகிறார். இதுபோல் பல கோயில்களில் இறைவனின் பெயருக்கு பின்னால் நிச்சயமாக ஒரு காரணம் அமைந்திருக்கிறது.





















