நள்ளிரவு வரை பரபரப்பை கிளப்பிய திமுகவினர்: அனுமதியின்றி முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி சிலையை வைக்க முயற்சி
தகவல் கிடைத்தவுடன் பேரூராட்சி செயல் அலுவலர் கமலக்கண்ணன் அண்ணாதுரை சிலை வைக்க மட்டும் தான் பேரூராட்சி நிர்வாகத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பஸ்ஸ்டாண்டில் எவ்வித அனுமதியும் இல்லாமல் முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி சிலை வைக்க திமுகவினர் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் புகாரின் பேரில் போலீசார் தலையிட்டு சிலையை அங்கிருந்து அகற்றி செல்ல நடவடிக்கை எடுத்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை தேர்வுநிலை பேரூராட்சியில் 2023-2024 கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.3 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில், அனைத்து கட்டமைப்புகளுடன் கூடிய நவீன புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டது.
இப்புதிய பஸ் ஸ்டாண்டில் ஏற்கனவே பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்த அண்ணாதுரை சிலையை அமைக்க மனு கொடுக்கப்பட்டது. அதாவது நெடுஞ்சாலையை நோக்கி 10அடி × 10 அடி அளவில் அமைத்துக்கொள்ள உரிய இடம் ஒதுக்கி தர திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் பேரூராட்சி மன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் நேற்று 12ம் தேதி இரவு 10 மணி அளவில் திமுகவினர் புதிய பஸ் ஸ்டாண்டில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் அண்ணாதுரை சிலையை கிரேன் உதவியுடன் கொண்டு வந்து வைத்தனர். இதற்கு பின்னர்தான் இருக்கிறது டுவிஸ்ட். அங்கு அண்ணாதுரை சிலை வைக்க மட்டுமே மனு கொடுக்கப்பட்டு இருந்த நிலையில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி முன்னாள் அமைச்சர் கோ.சி. மணி சிலையையும் கொண்டு வந்து கிரேன் உதவியுடன் வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இத்தகவல் கிடைத்தவுடன் பேரூராட்சி செயல் அலுவலர் கமலக்கண்ணன் அண்ணாதுரை சிலை வைக்க மட்டும் தான் பேரூராட்சி நிர்வாகத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் அமைச்சர் கோ சி மணி சிலை அமைக்க எவ்வித அனுமதியும் தரப்படவில்லை. அரசின் விதிகளின்படி முறையாக அனுமதி பெற்று வைக்கலாம். தற்போது அனுமதி இல்லாமல் வைக்கப்படுவது தெரிய வருகிறது என தெரிவித்து திருவிடைமருதூர் போலீசில் புகார் கொடுத்தார்.
இந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கிருந்த முன்னாள் எம்.பி., ராமலிங்கத்திடம் அனுமதி பெற்றுதான் கோ.சி.மணி சிலை வைக்க வேண்டும். அண்ணா சிலை வைக்க மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோ.சி.மணி சிலை வைப்பது குறித்து எவ்வித அனுமதியும் வழங்கப்படவில்லை. எனவே அந்த சிலையை வைக்கக்கூடாது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து இரவு 11.30 மணி அளவில் கோ.சி.மணி சிலையை திமுகவினர் மீண்டும் எடுத்துச் சென்றனர். தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் ஆடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




















