ரத்த நாளத்தில் சிக்கலான அறுவை சிகிச்சை: தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவக்குழுவினர் சாதனை
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக இருவருக்கு ரத்த நாளத்தில் மிக சிக்கலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக இருவருக்கு ரத்த நாளத்தில் மிக சிக்கலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இதற்காக மருத்துவக்குழுவினரை மருத்துவக்கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன் பாராட்டினார்.
ரத்த நாளத்தில் மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சையை 2 பேருக்கு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரத்தநாள அறுவைத்துறை மருத்துவர்கள் செய்து சாதனை படைத்துள்ளனர். இதுகுறித்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி முதல்வர் ஆர்.பாலாஜிநாதன், ரத்த நாள அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் ச.மருதுதுரை ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தைச் சேர்ந்த 72 வயதுடைய முதியவர் ஏற்கெனவே இதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர். தீராத வயிற்றுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டார். இதில், வயிற்றுப் பகுதியிலுள்ள பெருந்தமனி ரத்தக் குழாயில் வீக்கம் ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலுள்ள ரத்த நாள அறுவை சிகிச்சைத் துறையில் பரிசோதிக்கப்பட்டபோது, அது எந்த நேரத்தில் வெடித்து ஆபத்தை ஏற்படுத்தும் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து, இத்துறையில் தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கட்டணமின்றி நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் பெருந்தமனியில் செயற்கை ரத்தக் குழாய் பொருத்தப்பட்டது. இந்தச் செயற்கை ரத்தக் குழாய் மூலம் பெருந்தமனியிலிருந்து ரத்த ஓட்டம் இடது காலுக்கு செலுத்தப்பட்டு, ஓப்பன் பைபாஸ் வழியாக இடது காலிலிருந்து வலது காலுக்கு செயற்கை ரத்தக் குழாய் மூலம் ரத்த ஓட்டம் செலுத்தப்பட்டது.
நுண்துளை மற்றும் அறுவை சிகிச்சை இவை இரண்டும் ஒரே நேரத்தில் செய்யப்பட்டது. தற்போது பெருந்தமனியிலும், இரு கால்களிலும் ரத்த ஓட்டம் சீராகி ஆரோக்கியமாகவுள்ளார். இந்தச் சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் சுமார் ரூ.10 லட்சம் செலவாகும்.
இதேபோல் திருவாரூரில் வசித்து வரும் திருப்பத்தூரைச் சேர்ந்த 58 வயது கூலி தொழிலாளி இருமல், சளி, தொண்டை கரகரப்பு காரணமாக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை அணுகினார். இவருக்கு நுரையீரல் பிரிவில் செய்யப்பட்ட சிடி ஸ்கேன் பரிசோதனையில் நெஞ்சுக்கூட்டில் பெருந்தமனி ரத்தக் குழாயில் வீக்கம் ஏற்பட்டு, எந்த நேரத்திலும் வெடித்து உயிருக்கு ஆபத்து நிகழலாம் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து, ரத்த நாள அறுவை சிகிச்சை துறைக்கு பரிந்துரைக்கப்பட்ட இவருக்கு மார்பை பிளக்காமல் நுண்துளை அகநாள அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, பெருந்தமனியில் செயற்கை ரத்தக் குழாய் (ஸ்டென்ட் கிராப்ட்) பொருத்தப்பட்டது. இதற்கு தனியார் மருத்துவமனையில் ரூ.7 லட்சம் செலவாகும். இங்கு தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கட்டணமில்லாமல் செய்யப்பட்டது. இதன் மூலம் நோயாளிக்கு தற்போது பெருந்தமனியில் ரத்த ஓட்டம் சீராகவுள்ளது. ரத்தக் குழாய் வெடிக்கும் அபாயமும் தவிர்க்கப்பட்டுள்ளது. இப்போது இவர்கள் இருவரும் மிகவும் நலமாக உள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதற்காக ரத்த நாள அறுவை சிகிச்சைத் துறை மருத்துவர்கள், பணியாளர்களைக் கல்லூரி முதல்வர் பாராட்டினார். மேலும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரத்தநாள அறுவைத்துறை மாநில அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதில் நிலைய மருத்துவ அலுவலர் செல்வம், மருத்துவ கண்காணிப்பாளர் ராமசாமி, மயக்கவியல் துறை மருத்துவர் சாந்தி பால்ராஜ், மருத்துவர்கள் தேவராஜன், முரளி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.