தஞ்சை அருகே ஆலக்குடியில் விவசாயிகளுடன் இணைந்து பனை விதை நடும் பணியை தொடங்கி வைத்த கலெக்டர்
பனைமரம் தமிழர்களின் அடையாளம். பனையின் வேர் முதல் நுனி வரை பயன் தருகிறது. எனவே இதற்கு ‘கற்பகதரு’ என்று பெயர்.
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் ஆலக்குடியில் விவசாயிகளுடன் இணைந்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் பனை விதை நடும் பணியை தொடக்கி வைத்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் ஆலக்குடி ஊராட்சி, மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலைத் துறை மற்றும் தோட்டக்கலைத் துறை ஆகியவை சார்பில் விவசாயிகளுடன் இணைந்து பனை விதைகள் நடும் பணியினை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் தெரிவித்ததாவது: தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின்மூலம் அனைத்து வட்டாரங்களுக்கும் 36000 பனை விதைகள் மற்றும் 250 பனைகன்றுகள் வரப்புகளில் சாகுபடி செய்வதற்காக 100 சதவீத மானியத்துடன் வழங்கப்பட்டு வருகிறது.
இதில் ஒரு விவசாயிக்கு 50 பனைவிதைகள் மற்றும் பொதுஇடத்திற்கு 100 பனை விதைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை அனைத்து விவசாயிகளும் சம்பந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியம் ஆலக்குடி ஊராட்சி மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலைத் துறை மற்றும் தோட்டக்கலைத் துறை சார்பில் விவசாயிகளுடன் இணைந்து பனை விதைகள் நடும் பணி தொடங்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.
தொடர்ந்து திருவையாறு ஊராட்சி ஒன்றியம் விண்ணமங்கலம் ஊராட்சியிலுள்ள ஏரிக்குளக் கரையில் பனைவிதைகளை நடும் பணிகள் குறித்தும், தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியம் நாஞ்சிக்கோட்டை ஊராட்சி மறியலிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தில் வழங்கப்படும் உணவின் தரம், சமையலறையில் உணவு தயாரிக்கும் முறை குறித்தும், விண்ணமங்கலம் ஊராட்சி மற்றும் பூதலூர் ஊராட்சி ஒன்றியம் சுக்காம்பார் கிராமம் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் விண்ணப்பங்கள் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருவது குறித்தும் பொதுமக்களிடம் கேட்டறியப்பட்டது.
மேலும் திருச்சென்னம் பூண்டி ஊராட்சியில் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் பொது விநியோக திட்ட அங்காடி கட்டிட கட்டுமானப்பணிகள் குறித்தும், திருக்காட்டுப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிட கட்டுமானப்பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து கோவிலடி ஊராட்சி சுக்காம்பார் கிராமம் அருகே கொள்ளிடக்கரையோரம் படித்துறை பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. மேற்கண்ட பழுது பணிகளை ஏற்பட்டுள்ளதை விரைவாகவும் தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியம் திருமலைச்சமுத்திரம் ஊராட்சியிலுள்ள விருட்சவனத்தில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சிப்பணிகள் குறித்தும் மாவட்ட கலெக்டர் தலைவர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதில் நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் செந்தில்குமார், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் செல்வராஜ், பூதலூர் ஒன்றியக்குழு தலைவர் செல்லக்கண்ணு, தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர்கள் கனிமொழி, முத்தமிழ்செல்வி, வட்டாட்சியர்கள் சக்திவேல் (தஞ்சாவூர்), பெர்ஷியா (பூதலூர்), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், கென்னடி, காந்திமதி, பொற்செல்வி, ராஜா மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.
பனைமரம் தமிழர்களின் அடையாளம். பனையின் வேர் முதல் நுனி வரை பயன் தருகிறது. எனவே இதற்கு ‘கற்பகதரு’ என்று பெயர். இதில் 801 பயன்பாட்டு பொருட்கள் இருப்பதாக ‘தாலவிலாசம்’ என்ற நுால் கூறுகிறது. பனைமரம் பல்லுயிர் களின் வாழிடமாக உள்ளது. நாம் பயன்படுத்தும் காகிதத்தின் ஆயுட்காலம் நுாறு ஆண்டுகள். பனை ஓலையின் ஆயுட்காலமோ 400 ஆண்டுகள். பண்டைய கால இலக்கியங்கள் எல்லாம் ஓலைச் சுவடியில் எழுதப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. பனை மரங்களை வளர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படும் பல்வேறு நிகழ்ச்சிகள் தன்னார்வலர்களாலும், அரசாலும் நடத்தப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.