(Source: Poll of Polls)
CM MK Stalin: தஞ்சை ஆசிரியை படுகொலை: நிதியுதவி அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்!
கொலை செய்யப்பட்டு உயிரிழந்த ஆசிரியை குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்ட மல்லிப்பட்டினம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட ஆசிரியையின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே சின்னமனை பகுதியைச் சேர்ந்த முத்து என்பவரின் மகள் மகள் ரமணி (26). இவர் மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்தார். அதே பகுதியைச் சேர்ந்த பன்னீர் செல்வம் என்பவர் தனது மகன் மதன் (30)-க்கு திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். ரமணியை தங்களின் மகன் மதனுக்கு பெண் கேட்டு சென்றுள்ளனர் ரமணி மதனைத் திருமணம் செய்வதில் விருப்பமில்லை என தெரிவித்த்தாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மதன் இன்று காலை ரமணி பணியுரியும் பள்ளிக்குள் அத்துமீறி சென்றுள்ளார். திருமணத்திற்கு ‘விருப்பம் தெரிவிக்கவில்லை’ என்பதால் ரமணியை கழுத்து பகுதியில் மதன் கத்தியால் குத்தினார். இதில் ரமணி மயங்கி விழுந்தார். அவர்கள், ரமணியை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பள்ளிக்குள் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கவலறிந்த சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மதனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு இருக்கின்றமர்.
முதலமைச்சர் இரங்கல்:
“ தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், மல்லிப்பட்டினம் அரசுமேல்நிலைப் பள்ளியில் தற்காலிக பட்டதாரி தமிழ் ஆசிரியையாகப் பணிபுரிந்துவந்த செல்வி ரமணி (வயது 26) இன்று (நவ. 20) காலை பள்ளி வளாகத்தில் இருந்தபோது மதன்குமார் என்ற நபரால் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தார் என்ற செய்தியைக்கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக உயர்கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்களை உயிரிழந்த ஆசிரியை குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க அனுப்பிவைத்தேன். பள்ளி ஆசிரியை கொலை செய்யப்பட்டுள்ள இச்சம்பவமானது மிகவும் மிருகத்தனமானது, இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு அவர்மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.இந்த வழக்கின் விசாரணை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு குற்றவாளிக்கு விரைவில் சட்டப்படி தண்டனை பெற்றுத்தரப்படும்.” என்று அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
” கிராமப்புறப் பகுதியில் கல்விப்பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட ஆசிரியை ரமணியின் உயிரிழப்பு பள்ளிக் கல்வித் துறைக்கும், சக ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். ஆசிரியை ரமணியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள், சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிவாரண உதவி:
கொலை செய்யப்பட்டு உயிரிழந்த ஆசிரியை ரமணி குடும்பத்தினருக்கு ஐந்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.