மயிலாடுதுறையில் அம்பேத்கர் நினைவு தினத்தில் மோதல் - அப்பாவிகளை கைது செய்வதாக போலீஸ் மீது புகார்
அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்திய போது ஏற்பட்ட மோதல் தொடர்பாக இருவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொண்டு சென்றபோது வாகனத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே பட்டவர்த்தி கிராமத்தில் மதகடி பேருந்து நிறுத்தத்தில் டிசம்பர் 6 ஆம் தேதி அம்பேத்கரின் 65 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அம்பேத்கரின் திருவுருவப் படத்தை வைத்து அஞ்சலி செலுத்துவதற்கான நிகழ்ச்சியை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஏற்பாடு செய்திருந்தனர். இதற்கு அப்பகுதியை சேர்ந்த ஒரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் ஜாதி மோதல் ஏற்பட வழிவகுக்கும் என்று கூறியதால் பட்டவர்த்தி கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து விடுதலை சிறுத்தை கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் ஈழவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அம்பேத்கர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஒரு சமூகத்தினருக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
மோதலை தொடர்ந்து இரண்டு தரப்பினரும் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். உடனடியாக கலவரம் ஏற்படாதவாறு போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் டாஸ்மாக் மதுபானக்கடையும், மற்ற கடைகளும் அடைக்கப்பட்டன. இந்தச் சம்பவத்தில் காயமடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஐந்து பேர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக இரு சமூகத்தினரும் மணல்மேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் பேரில் மணல்மேடு காவல்துறையினர் இருதரப்பிலும் 8 பேரை கைது செய்து மேலும் பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மேட்டூரில் வேலை பார்த்துகொண்டிருந்த ஆனந்த்ராஜ் (33), சங்கர் (28) ஆகியோர் கடந்த 10 ஆம் தேதி பட்டவர்த்திக்கு சங்கரின் தாயார் இறந்ததை அடுத்து வந்துள்ளனர். இருவரையும் 6 ஆம் தேதி சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்று மணல்மேடு போலீசார் விசாரணைக்காக மயிலாடுதுறை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். கடந்த 6 ஆம் தேதி நடந்த சம்பத்தின் போது மேட்டூரில் வேலைபார்த்ததற்கான ஆதாரங்களை அவரது உறவினர்கள் காட்டியும் போலீசார் அவர்களை விடாமல் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து செல்ல முயன்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் மற்றும் துரைராஜ், ஸ்டாலின் உள்ளிட்ட கட்சியினர் ஆனந்தராஜ், சங்கர் ஆகியோரை அழைத்து சென்ற போலீஸ் வாகனத்தை காவல் நிலையம் முன்பு தடுத்து நிறுத்தி முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் இருவரையும் விடுவித்தனர். கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அடையாளம் தெரியாததால் 41(A) நோட்டீஸ் வழங்கி விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் ஆவணங்களை சமர்ப்பித்ததால் விடுவிக்கப்பட்டதாகவும் மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் தெரிவித்தார்.