தஞ்சையில் குடிநீர் பாட்டில்களில் நெளியும் புழுக்கள்- கடை உரிமையாளரின் அலட்சிய பதில்...!
’’அந்த தண்ணீருக்கு மேலே இருக்கு கம்பெனிகாரன் தான் பொறுப்பு வேண்டும் என்றால் உங்களுக்கு வேறு தண்ணீர் பாட்டில் தரச் சொல்கிறேன்’’
தஞ்சாவூரில் கடந்த 1995 ஆம் ஆண்டு 8 வது உலக தமிழ்மாநாடு நடைபெற்ற போது, இராசராசன் மணிமண்டபம் கட்டப்பட்டது. அங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாவாசிகள், பொது மக்கள் வந்து மண்டபத்திலுள்ள ராஜராஜன் சிலை, சிறுவர்கள் விளையாடும் பூங்கா, கண்காட்சி அரங்கத்தை பார்வையிட்டு செல்வார்கள். இங்கு வரும் பொது மக்களுக்கு தேவையான திண்பண்டங்கள், குடிநீர் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை நிலையம் உள்ளது. இந்நிலையில், நேற்று நீட் தேர்வு என்பதால் தஞ்சையில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களுக்கு தஞ்சை உள்ளிட்ட திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக வந்திருந்தனர். பெரும்பாலானோர் குடும்பத்துடன் தங்கள் பிள்ளைகளை நீட் தேர்வு மையத்திற்கு அழைத்து வந்தனர்.
தேர்வு முடிந்து தங்கள் குழந்தைகள் வெளியே வர மாலை 5 மணி ஆகும் என்பதால் பெற்றோர்கள் தங்கள் அழைத்து வந்த குடும்பத்தினருடன் தஞ்சை பெரிய கோவில், மாரியம்மன் கோவில், மணிமண்டபம், உள்ளிட்ட இடங்களை சுற்றி பார்க்க சென்றனர். அதன்படி கும்பகோணத்தை பாலக்கரையை சேர்ந்த கலை என்பவர் மகனின் நீட் தேர்விற்காக தஞ்சையில் அமைக்கப்பட்டிருந்த நீட் தேர்வு மையத்திற்கு குடும்பத்துடன் வந்து காலை தேர்வு மையத்திற்குள் மகனை அனுப்பி வைத்துவிட்டு, பின்னர் தஞ்சை பெரிய கோவில், மாரியம்மன் கோவிலுக்கு தனது மனைவி மற்றும் மகளுடன் சென்றுள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டதால் பொழுதைக் கழிப்பதற்காக தஞ்சை மண்டபத்திற்கு வந்துள்ளார். விடுமுறை தினம் என்பதால் மணிமண்டபத்தில் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குவிந்திருந்துள்ளனர். இதையடுத்து கலை வீட்டில் சமைத்து எடுத்து வந்திருந்த சாப்பாட்டை மணி மண்டபத்திலேயே வைத்து தனது மனைவி மற்றும் மகளுடன் சாப்பிட நினைத்தார். பின்னர் தண்ணீர் பாட்டில் காலியானதால் மணிமண்டபத்தில் ஒப்பந்த அடிப்படையில் செயல்பட்டு வரும் குளிர்பான கடையில் தண்ணீர் பாட்டிலை வாங்கியுள்ளார்.
அந்தத் தண்ணீர் பாட்டில் மிகவும் கலங்கலாகவும், புழுக்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து அந்த கடை உரிமையாளர் வெள்ளைச்சாமியிடம் கேட்டபோது ஏஜென்டு பெட்டியோடு வைத்துவிட்டு சென்றுவிட்டனர். எனக்கு புழு இருப்பது தெரியாது நீங்கள் பார்த்த பிறகுதான் எனக்கு தெரியும் என சர்வ சாதாரணமாக கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கலை வெள்ளைச்சாமியிடமிருந்து தஞ்சை கீழவாசலில் அந்த தண்ணீர் பாட்டிலை சப்ளை செய்யும் ஏஜென்ட் காமராஜ் என்பவர் செல் நம்பரை வாங்கி அவரை தொடர்பு கொண்டு பேசினார்.
அதில், அந்த தண்ணீருக்கு மேலே இருக்கு கம்பெனிகாரன் தான் பொறுப்பு வேண்டும் என்றால் உங்களுக்கு வேறு தண்ணீர் பாட்டில் தரச் சொல்கிறேன் என்றார். இதற்கு பதிலளித்த கலை, இந்த புழுக்கள் உள்ள பாட்டில் தண்ணீரை கவனிக்காமல் குடித்திருந்தால், எனது நிலைமை, எனது கணவர், குழந்தை, பொது மக்களின் நிலைமை என்னவாகும் என கேள்வி எழுப்பினார். அதற்கு இது கம்பெனியின் தவறு, நான் உங்களுக்கு வேறு தண்ணீர் பாட்டில் தரச் சொல்கிறேன், பிரச்சனை வெளியில் தெரிந்தால், விபரீதமாகி விடும், இந்த குடி தண்ணீர் பாட்டில் நிறுவனம் பெரிய இடத்தின் பிரச்சனை, பிரச்சனை வந்தாலும் சமாளித்து விடுவோம் என கூறி, நேரில் வாருங்கள், உங்களை பேசுகிறேன் என சரி கட்டும் வகையில் பேசி, போனை துண்டித்தார்.
இந்த சம்பவத்தால் தஞ்சை மணிமண்டபத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த வீடியோவை கலை தனது சமூக வலைதளமான பேஸ்புக்கில் பதிவிட்டு உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மணி மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, மாவட்ட நிர்வாக அதிகாரிகள், அங்குள்ள விற்பனை நிலையத்தில் தரமான உணவு பொருட்களை வழங்க வேண்டும் என எச்சரித்து சென்றனர். எனவே, வெளியூர், வெளிமாவட்டத்திலிருந்து குழந்தைகளுடன் வரும் குடும்பத்தினர்கள் அதிகளவில் வரும் இராசராசன் மணி மண்டபத்தில், சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனடியாக, ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலை கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலையில் வீணாகிப்போன இறைச்சி செய்த பிரியாணி சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.