அரியலூர் மாணவி தற்கொலை : தடயவியல் துறையினர் அறிக்கை தர 15 நாட்கள் அவகாசம் கோரியுள்ளனர் - தமிழக அரசு
விசாரணை முறையாக வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்படுகிறது என தமிழ்நாடு அரசு வாதம் செய்தது.
அரியலூர் மாணவி தற்கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரிய வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாணவி தற்கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்ற கிளை நீதிபதி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
விசாரணை முறையாக வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்படுகிறது என தமிழ்நாடு அரசு வாதம் செய்தது. மாணவி வீடியோவை எடுத்த முத்துவேல் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கவில்லை என்றும், தமிழ்நாட்டில் பிரச்னையை உருவாக்கவே மாணவியின் இறப்பிற்கு பிறகு வீடியோ பரப்பப்படுவதாகவும், உண்மையில் நீதியை விரும்பியிருந்தால் வீடியோவை எடுத்த அன்றே பரப்பியிருக்கலாமே? என்றும் அரசு வாதிட்டது.
மேலும், வீடியோவை ஆய்வு செய்த தடவியல் துறை அறிக்கை அளிக்க 15 நாட்கள் அவகாசம் கோரியுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், மாணவியின் மரணத்திற்கு மதமாற்றம்தான் காரணம் என குற்றம்சாட்டப்பட்டு அரசியலாக்கப்படுவதாகவும் பள்ளி தரப்பு வாதம் செய்தது.
இந்த வழக்கில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை பெற்றோருக்கு குறைந்துவிட்டதாக மனுதாரர் தரப்பில் வாதம் செய்யப்பட்டது. மாணவியின் தற்கொலைக்கான காரணத்தை கண்டறியவது அவசியம் என்பதால், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றப்பட வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பு வாதிட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்