திருவோணம் யூனியன் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை
தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் யூனியன் அலுவலகத்திற்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீரென்று ஆய்வுக்கு வந்தனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் யூனியன் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று மாலை ஆரம்பித்த சோதனையை இரவு முடித்தனர். இந்த சோதனையில் யூனியன் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ. 1.31 லட்சத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
தமிழக முழுவதும் தீபாவளி பண்டிகை காலத்தில் அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் லஞ்சம் மற்றும் கணக்கில் வராமல் பணத்தினை கண்டறியும் பொருட்டு லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி நேற்று பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் யூனியன் அலுவலகத்திற்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று மாலை திடீரென்று ஆய்வுக்கு வந்தனர். அப்போது யூனியன் அலுவலகத்தில் நின்ற கான்ட்ராக்டர் ஒருவரின் காரை சோதனை செய்து விசாரணை நடத்திய போது, அவரிடம் சுமார் ரூ. 1 லட்சம் ரூபாய் இருந்தது.
தொடர்ந்து, யூனியன் அலுவலகத்தின் உள்ளே சென்ற லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், ஒவ்வொரு அலுவலர்களிடம் விசாரணை நடத்தி, பணம் எதுவும் லஞ்சமாக பெற்றுள்ளனரா என சோதனை செய்தனர். இருப்பினும், அலுவலர்கள் தரப்பில் இருந்து, ரூ.31 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. கான்ட்ராக்டர் வைத்திருந்த ரூ.1 லட்சம் மற்றும் அலுவலர்களிடம் இருந்த பணம் என மொத்தம் ரூ.1.31 லட்சம் கைப்பற்றி, நான்கு மணி நேரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி சென்றனர்.
மேலும், கான்டராக்டரிடம் இருந்த பணம் ஒரு லட்சம் மற்றும் அலுவலர்களிடம் பணம் குறித்து, விளக்கம் கடிதம் பெறப்பட்டுள்ளதாகவும், அலுவலகத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் 50 ஆயிரம் ரூபாயை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அரியலூர் மாவட்டம் கீழப்பழூவூரில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கணக்கில் வராத தொகை ரூ.50 ஆயிரத்தை கைப்பற்றினர்.

கைப்பற்றப்பட்ட பணத்திற்கான கணக்கு குறித்து அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் குளித்தலை சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டு கணக்கில் வராத ரூ.3 லட்சத்தை கைப்பற்றினர். குளித்தலை சார் பதிவாளர் அலுவலகத்தில் கரூர் டிஎஸ்பி ஆம்ரோஸ் தலைமையில் இன்ஸ்பெக்டர் சுவாமிநாதன் அடங்கிய குழுவினர் திடீர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சார் பதிவாளர் அலுவலகத்தில் துணை பதிவாளர் ஸ்ருதி, பத்திர எழுத்தர், பத்திரம் பதிய வந்தவர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் இருந்தனர். சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக அலுவலகத்தை பூட்டி நடைபெற்ற இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.3 லட்சம் பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர்.
சார் பதிவாளர் மற்றும் அலுவலகத்தில் பணியாற்றும் பணியாளர்களிடம் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். இந்த அதிரடி சோதனைகள் பரபரப்பை ஏற்படுத்தின.





















