மனுதர்ம-சனாதன கொள்கைகளை முறியடிப்போம்; அம்பேத்கர் நினைவு நாள் உறுதிமொழி ஏற்பு
ஒடுக்கப்பட்ட மக்களின் சம உரிமைகளுக்காகவும், சமத்துவத்திற்காகவும் சாதி மதம் கடந்த ஒன்றிணைந்த போராட்டத்தை முன்னெடுப்போம் என்று உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தஞ்சாவூர்: மக்களை பிளவுபடுத்தும் மனுதர்ம-சனாதன கொள்கைகளை முறியடிப்போம் என்று சட்ட மாமேதை அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்ச்சியில் தஞ்சையில் இடதுசாரிகள் பொதுமேடை சார்பில் உறுதியேற்கப்பட்டது.
தஞ்சாவூரில் பல்வேறு அமைப்புகள் சார்பில் அம்பேத்கரின் 68 வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நாடு விடுதலை பெற்ற பிறகு இந்திய அரசியலமைப்பு சட்டத்தை இயற்றிய சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் 68வது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி இடதுசாரிகள் பொதுமேடை சார்பில் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் எதிரில் நடந்தது. மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன் தலைமை வகித்தார்.
இதில் நாட்டில் நிலவி வரும் சாதிய, தீண்டாமை கொடுமைகளை முறியடிக்கவும், மக்களை பிளவுபடுத்தும் கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்திடவும், மக்ககளை அடிமைகளாக வைத்திருக்கும் மனுதர்ம-சனாதன கொள்கைகளை விரட்டி அடிக்கவும், அம்பேத்கர் இயற்றி தந்த சட்டத்தின்படி அடக்கப்பட்ட சிறுபான்மை மக்களை பாதுகாக்கவும், தேசிய இனங்களின் உரிமைகளை பாதுகாக்கவும், அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் சம உரிமைகளுக்காகவும், சமத்துவத்திற்காகவும் சாதி மதம் கடந்த ஒன்றிணைந்த போராட்டத்தை முன்னெடுப்போம் என்று உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன், மக்கள் கலை இலக்கிய கழக இணைச்செயலாளர் ராவணன், சிபிஐ (எம்) நிர்வாகி என்.குருசாமி, ஏஐடியுசி மாவட்ட தலைவர் வெ.சேவையா, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மாவட்ட தலைவர் அருள், செயலாளர் லட்சுமணன், ஆட்டோ சங்க பாதுகாப்பு பேரவை தாமஸ், சாமிநாதன், திராவிட தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ரெங்கராஜ், ஆதித் தமிழர் பேரவை கலை இலக்கிய பிரிவு மாநிலத் துணைத் தலைவர் நாத்திகன், நிர்வாகிகள் தியாகராஜன், மாயன்,மணி, நாகராஜ், பிரேம் குமார், போக்குவரத்து சங்க நிர்வாகிகள் முருகவேல், தங்கராசு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலகத்தில் மாநகரச் செயலாளர் ஆர்.பி.முத்துக்குமரன் தலைமையில் அம்பேத்கர் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் ஏஐடியுசி மாநிலச் செயலாளர் சி.சந்திரகுமார், தமிழ்நாடு விவசாய சங்க மூத்த தலைவர் வீர.மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு கட்சியின் தஞ்சாவூர் மத்திய மாவட்ட செயலாளர் ஜெயசங்கர் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதேபோல் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு அக்கட்சியினர் மாநகர மாவட்ட செயலாளர் அண்ணாதுரை தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மா.லெ) சார்பில் நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாநகரச் செயலாளர் எஸ்.எம்.ராஜேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதேபோல் தஞ்சாவூர் ரயிலடி முன்பு ஆதித்தமிழர் பேரவை மகளிரணி சார்பில் மாவட்டச் செயலாளர் உமா மகேஸ்வரி தலைமையில், துணைத் தலைவர் வைத்தீஸ்வரி முன்னிலையில் அம்பேத்கர் உருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் உள்ள அம்பேத்கர் சிலைக்கு பல்வேறு அமைப்பினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

