50 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தல்! அதிரடியாக பறிமுதல் செய்த போலீசார்
50 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து கடத்தி வந்தவர் யார் ? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனை கடத்தி வரப்பட்ட 50 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றை கடத்தியவர்கள் யார் என்பது குறித்து ரயில்வே இருப்புபாதை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஓடும் ரெயில்களில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி செல்லப்படுவதை தடுக்க அந்தந்த ரெயில் நிலையங்களில் ரெயில்வே போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் மதுபாட்டில்கள் , கஞ்சா கடத்தலையும் தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி தஞ்சை வழியாக சென்ற ரெயில்களில் இருப்பு பாதை போலீசார் சோதனை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது நேற்று மாலை புவனேஸ்வர்- ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரெயில் தஞ்சையில் ஓரிரு நிமிடங்கள் நின்றது. அந்த ரெயிலில் முன்பதிவு இல்லாத பெட்டியில் ஏறி இருப்பு பாதை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் தமிழரசன், ராமநாதன், தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயக்குமார், விநாயகமூர்த்தி, அண்ணாதுரை, தலைமை காவலர்கள் பரமேஸ்வரி, கவுசல்யா ஆகியோர் சோதனை செய்தனர். அப்போது ஒரு இருக்கையின் அடியில் தனியாக 3 மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த மூட்டைகள் யாருடையது என்று தெரியாததால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த மூட்டைகளை பிரித்து பார்த்தனர். அதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பண்டல் பண்டல்களாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து அந்த மூட்டைகளை மொத்தம் 50 கிலோ அளவுக்கு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து புகையிலை பொருட்களை ரயில்வே போலீசார் கைப்பற்றி விசாரித்தனர். ஆனால் புகையிலை பொருட்களை கடத்தி வந்தவர் யார் என்று உடனடியாக தெரியவில்லை.
இதையடுத்து 50 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து கடத்தி வந்தவர் யார் ? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போது தமிழகத்தில் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் பேரூராட்சி நிர்வாகத்தினர் தங்கள் பகுதியில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில் அவ்வபோது சோதனைகள் நடத்தி வருகின்றனர். அதேபோல் போலீசார் கார், பேருந்து உட்பட பல்வேறு வாகனச் சோதனைகளில் ஈடுபட்டு புகையிலை பொருட்கள் கடத்தலை தடுத்து வருகின்றனர்.
அதனால் தற்போது புகையிலைப் பொருட்கள் கடத்துபவர்கள் ரயிலை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் ரயில்வே போலீசாரும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் தஞ்சாவூரில் நடந்த சோதனையில் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.






















