(Source: ECI/ABP News/ABP Majha)
அரியர் மாணவர்களுக்கு தேர்வு நடத்துவதற்கு பரிசீலிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு..
மாணவர்களுக்கு அரியர் தேர்வுகள் நடத்துவது குறித்துப் பரிசீலிக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியது உயர்நீதிமன்றம்.
அரியர் தேர்வுகளை நடத்தாமல் பல்கலைக்கழகங்கள் தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது என்றும், தேர்வு முடிவுகளை ரத்துசெய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவும் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், மாணவர்களுக்கு அரியர் தேர்வுகள் நடத்துவது குறித்துப் பரிசீலிக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு, கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, இறுதி ஆண்டு பருவத் தேர்வு தவிர, பல்கலைக்கழகங்கள், கலை, அறிவியல் கல்லூரிகளின் அரியர்ஸ் தேர்வுகள், தொழில்நுட்பக் கல்லூரிகளின் அரியர்ஸ் தேர்வுகளை முதல்வர் பழனிசாமி முன்னதாக ரத்துசெய்தார். மேலும், அரியர்ஸ் தேர்வு எழுத தேர்வுக்கட்டணம் செலுத்திய அனைத்து அரியர்ஸ் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தார்.
அரியர் தேர்வு ரத்து அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு விசாரித்தது . தமிழக அரசின் சார்பாக ஆஜரான தலைமை வழக்கறிஞர் பல்கலைக்கழக மானியக் குழு விதிகளின் அடிப்படையிலேயே கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
இதற்குப் பதிலளித்த பல்கலை மானியக் குழு, " இறுதிப்பருவம் / இறுதியாண்டுத் தேர்வுகளைப் பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்கள் செப்டம்பர் 2020 இறுதிக்குள் ஆஃப்லைன் (பேனா மற்றும் பேப்பர்) / ஆன்லைன் / இரண்டும் கலந்தது (ஆன்லைன் + ஆஃப்லைன்) முறையில் நடத்தும். இறுதிப்பருவம் / இறுதியாண்டு மாணவர்கள் முந்தையப் பருவத் தேர்வுகளின் பாடங்களில் தேர்ச்சி பெறாமல் இருந்தால் சூழலுக்கு ஏற்பவும், சாத்தியங்களின் அடிப்படையிலும் ஆஃப்லைன் (பேனா மற்றும் பேப்பர்) / ஆன்லைன் / இரண்டும் கலந்த (ஆன்லைன் + ஆஃப்லைன்) முறையில் தேர்வு நடத்தியே மதிப்பீடு செய்யவேண்டும். இடைநிலை செமஸ்டர் மாணவர்களைப் பொறுத்தவரை தற்போதைய மற்றும் முந்தைய செமஸ்டரின் உள் மதிப்பீட்டின் அடிப்படையில் தரப்படுத்தப்படும். கோவிட்-19 நிலைமை இயல்பாக காணப்படும் மாநிலங்களில், ஜூலை மாதத்தில் தேர்வுகள் நடைபெறும் என்றுதான் அறிவிக்கப்பட்டது. கட்டணம் செலுத்திய அனைத்து மாணவர்களும் அரியர்ஸ் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கவில்லை என்று தெரிவித்தது.
யுஜிசி வழிகாட்டுதல்களின்படி உள் மதிப்பீட்டின் அடிப்படையில் அரியர் மாணவர்கள் தரப்படுத்தப்பட்டதாக தமிழக அரசுத் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஒவ்வொரு பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் அரியர் தேர்வுகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் பட்டியல், தற்போதைய மற்றும் முந்தைய செமஸ்டரின் உள் மதிப்பீட்டின் அடிப்படையில் அரியர் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற மாணவர்களின் எண்ணிக்கைய அடங்கிய தரவுகளை தமிழக அரசு வரும் ஏப்ரல் 15-ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவேண்டும் என்று தெரிவித்தனர்.
வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், மாணவர்களுடைய கல்வித்தரம், பணிவாய்ப்புகள் மற்றும் எதிர்கால முன்னேற்றம் ஆகியவற்றை உறுதிப்படுத்த தேர்வு முக்கியமானது என்றாலும், லட்சக்கணக்கான மாணவர்கள் படிப்பை முடித்துவிட்டதாக கருதி வருகின்றனர். எனவே, மாநில அரசும், பல்கலைக்கழக மானியக் குழுவும் ஒன்றிணைத்து, மாணவர்களின் நலன்களை உறுதிசெய்யும்படியான பரிந்துரைகளையும் கொண்டு வருமாறு நீதிமன்றம் பரிந்துரைத்தது.
முன்னதாக அரியர் தேர்வுகளை நடத்தாமல் முடிவுகளை வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தொடர்பாக பதிலளித்த பல்கலைக்கழக மானியக்குழு அரியர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தது. அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தியன் ஆகியோர் அரியர் தேர்வு ரத்தை எதிர்த்து மனுதாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.