பீஸ்ட் படத்திற்காக புதுச்சேரியில் திரையரங்கு கட்டணம் உயர்வா? - விஜய் ரசிகர்கள் குழப்பம்
ஆட்சியர் அலுவலக தரப்பில் விசாரித்த போது, புதுச்சேரியில் திரையரங்குகளில் கட்டணத்தை உயர்த்த அரசு அனுமதி தரவில்லை என கூறி உள்ளனர்
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் தயாரிப்பில் உருவாகி உள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் 13ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், புதுச்சேரியில் இதனை கொண்டாடும் விதமாக நடிகர் விஜய் உடன் முதலமைச்சர் என்.ரங்கசாமி இருக்கும் பிரம்மாண்ட கட் அவுட்கள் புதுச்சேரி முழுவதும் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை அடுத்த பனையூரில் உள்ள இல்லத்தில் நடிகர் விஜயை புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி சந்தித்து பேசினார். புதுச்சேரியில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் வர உள்ள நிலையில் நடிகர் விஜய் உடன் முதலமைச்சர் என்.ரங்கசாமி இருக்கும் கட் அவுட்கள் வைக்கப்படுவது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
டிக்கெட் விலை உயர்வு:
பீஸ்ட் திரைப்படம் வெளியாக உள்ள அதே நேரத்தில் புதுச்சேரியில் உள்ள திரையரங்குகளில் திரைப்பட கட்டணம் 100 ரூபாய் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று புதுச்சேரி அரசு விளக்கம் அளித்துள்ளது. வரும் 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு மட்டும் புதுச்சேரி அரசு உத்தரவுப்படி காட்சிகளுக்கான கட்டணம் உயர்த்தப்படுவதாக கூறப்பட்டு உள்ளது.
இதன்படி 3 ஆம் வகுப்பு கட்டணம் 50 ரூபாய் இருந்து 150 ரூபாயாகவும், இரண்டாம் வகுப்பு கட்டணம் 75ரூபாயில் இருந்து 175 ரூபாயாகவும், முதல் வகுப்பு கட்டணம் 100 ரூபாயில் இருந்து 200 ரூபாயாகவும், பால்கனி கட்டணம் 150 ரூபாயில் இருந்து 250 ரூபாயாகவும், பாக்ஸ் கட்டணம் 160 ரூபாயில் இருந்து 260 ரூபாயாகவும் என்று உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வு குறித்து பொதுமக்க கூறுகையில், இதுவரை இதுபோல் நடந்ததில்லை. மக்களை ஏமாற்றும் செயல். எத்திரைப்படம் வந்தாலும் சரியான கட்டணமே வாங்க வேண்டும். பெரிய நடிகரின் படம் என்றால் 100 ரூபாய் வரை அனைத்து வகுப்புகளுக்கும் உயர்த்த அரசு அனுமதி அளித்துள்ளது தவறான போக்கு என்று குற்றம் சாட்டினர். கட்டண உயர்வு கூறித்து ஆட்சியர் அலுவலக தரப்பில் விசாரித்த போது, புதுச்சேரியில் திரையரங்குகளில் கட்டணத்தை உயர்த்த அரசு அனுமதி தரவில்லை என்று குறிப்பிட்டனர். ஆனால் திரையரங்கு வட்டாரங்களோ, பீஸ்ட் திரைப்படத்துக்கு கட்டணம் நான்கு நாட்களுக்கு அனைத்து வகுப்புகளிலும் 100 ரூபாய் வரை உயர்த்தப்பட உள்ளது. அதற்காக போர்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளது. மக்கள் பார்வைக்காக இதுவரை வைக்கவில்லை. ஆனால் யாரோ அப்படங்களை எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விட்டனர் என கூறி உள்ளனர்.