Ajith Video : அஜித் என்ன சொன்னார் தெரியுமா? - பெண்ணின் வேலை பறிபோன விவகாரத்தில் அஜித் மேலாளர் விளக்கம்..
அஜித்தை வீடியோ எடுத்ததால் மருத்துவமனையில் இருந்து பர்ஷானா என்ற பெண் வேலையை விட்டு நீக்கப்பட்டதற்கு நாங்கள் காரணமில்லை என நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்
நடிகர் அஜித்தை வீடியோ எடுத்ததாக கூறி வேலையில் இருந்து பெண் நீக்கப்பட்டதற்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா Abp நாடு செய்தி நிறுவனத்திற்கு விளக்கம் அளித்துள்ளார்.
நாங்கள் அழுத்தம் கொடுத்துதான் அவரை அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வேலையை விட்டு நீக்கியது என அந்த பெண் சொல்வது முற்றிலும் தவறு என்று கூறியுள்ள சுரேஷ் சந்திரா, பொதுவாக ஒரு பிரபலம் என்பவர் 10 இடங்களுக்கு போகும்போது 100 பேர் புகைப்படமும், வீடியோவும் எடுப்பார்கள் அவர்களையெல்லாம் யார் என தேடி நடவடிக்கை எடுக்கவைப்பது என்பது சாத்தியம்தானா? என கேள்வியெழுப்பியுள்ள நடிகர் அஜித்தின் மேலாளர், அதுபோன்று, இந்த பெண் வீடியோ எடுத்த விவகாரத்திலும் நாங்கள் எதுவும் சொல்லவில்லை. அவரை வேலையை வீட்டு நீக்க வற்புறுத்தவும் இல்லை என பர்ஷானாவின் குற்றச்சாட்டை திட்டவட்டமாகவும் மறுத்துள்ளார்.
மருத்துவமனை நிர்வாகமே சிசிடிவி மூலம் இதை பார்த்துவிட்டு நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் என்றும், இதில் எங்களின் பங்கு ஒன்றுமில்லை எனவும் கூறியுள்ள சுரேஷ் சந்திரா, இதைக்கூட எனக்கு போலீசார் சொல்லித்தான் தெரியவந்தது என கூறியுள்ளதோடு, அதன்பிறகு பர்ஷானா அடிக்கடி அஜித்தின் அலுவலகம் வர ஆரம்பித்தார் என்றும், அப்போது நான் அவரிடம் உங்க வேலை பறிபோனதுக்கு நாங்க ஒன்றும் செய்யமுடியாது என்று சொன்னதற்கு, எனது குழந்தையின் பள்ளி கட்டணத்தைக்கூட இப்போது என்னால் கட்ட முடியவில்லை, அதை மட்டுமாவது கொடுத்து உதவுங்கள் என கேட்டார். நான் இதை அஜித் சாரின் கவனத்திற்கு எடுத்துச்சென்றேன். அதற்கு அஜித் என்ன சொன்னார் தெரியுமா? ”பர்சானா வேலை போனதற்கு நாம் காரணமோ இல்லையோ எனக்கு தெரியாது. ஆனால் அந்த குழந்தையின் கல்வி கட்டணத்தை நாம் கட்டிவிடிவோம்” என்று சொன்னார்.
வழக்கமாக இதுபோன்ற உதவிகள் செய்யும்போது பணத்தை கையில் யாரிடமும் நாங்கள் கொடுப்பதில்லை. பள்ளி நிர்வாகத்திடமோ அல்லது மருத்துவ உதவி கேட்டால் மருத்துவமனையிலேயே செலுத்துவிடுவோம். ஆனால் அவர் தனது வங்கிக்கணக்கில் செலுத்தச்சொன்னார். அதன்பிறகு அவர் தற்கொலைக்கு முயன்று காவல் நிலையம் வரை நான் சென்றதும். போலீசார் விசாரித்துவிட்டு நான் சொல்வதெல்லாம் உண்மை என தெரிந்த பிறகு என்னை அனுப்பிவிட்டனர். அதன்பிறகும் பல்வேறு வழிகளில் பணம்கேட்டு உதவிகேட்டும் இதுபோன்று தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார் என்றார்.
முன்னதாக இந்த விவகாரத்தை போலீசார் விசாரித்ததால் இதுகுறித்து கருத்து தெரிவிக்க முடியாது என சொன்ன அஜித் மேலாளர் சுரேஷ்சந்திரா, பின்னர் இந்த விவரங்கள் முழுவதையும் தெரிவித்ததோடு, அஜித்தின் உதவும் உள்ளம் அனைவருக்கும் தெரிந்ததுதான். அவரை போன்ற நேர்மையான மனிதரை பார்க்கமுடியாது என்றும் சொல்லி நெகிழ்ந்தார்.